கொரோனா பிடியில் இருந்து முழுமையாக விடுபடும் நேரம் நெருங்கிவிட்டதாகவே கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது. இதையடுத்து புதுப்படங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பாலாவின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். மேலும், அவரது படைப்புகள் குறித்து கலவையான விமர்சனங்களும் வெளிவரும். எனினும் பாலா இவை எதையும் கண்டுகொள்ளாத ரகம். தன் போக்கில் படங்களை இயக்கி வருகிறார்.
'சேது' படத்தின் மூலம்தான் விக்ரமின் திரைப்பயணம் உச்சத்துக்குச் சென்றது. அதனால் தனது மகன் துருவ்வும் பாலா படத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார்.
தெலுங்கில் வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மறுபதிப்பு உரிமையைப் பெற்று 'வர்மா' என்ற பெயரில் துருவ் நடித்த படத்தை இயக்கினார் பாலா. ஆனால் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை என வருத்தம் அடைந்தார் விக்ரம்.
படத் தயாரிப்புத் தரப்போ, மீண்டும் முழுப் படத்தையும் உருவாக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தது. இதனால் கோபமடைந்த பாலா, படக்குழுவில் இருந்து விலக, வேறொரு இயக்குநர் துருவ்வை வைத்து 'ஆதித்ய வர்மா' படத்தை எடுத்தது தனிக்கதை. ஆனால் இந்த விவகாரத்துக்குப் பிறகு பாலா கடும் மன உளைச்சலில் இருந்தாராம். அடுத்த சில மாதங்களுக்கு அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
பின்னர் ஆர்யா, அதர்வா இருவரையும் வைத்து அவர் ஒரு படத்தை இயக்குவதாகக் கூறப்பட்டது. பின்னர் அருள்நிதியுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்றனர். தனது இயக்கத்தில் நடித்த கதாநாயகர்களுடன் மீண்டும் இணைவதைத்தான் அவர் விரும்புதாகவும் கூறப்பட்டது.
"இந்நிலையில் பாலாவும் சூர்யாவும் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது வழக்கம் போல் ஓர் ஆருடத் தகவல் அல்ல. இருவரும் அண்மையில் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது பாலா கூறிய கதை தமக்குப் பிடித்திருப்பதாகச் சூர்யா சொல்லி இருக்கிறார்.
"எனினும் சூர்யாவுடன் இணையும் பட வேலைகளை சற்று ஒத்திவைத்தார் பாலா. காரணம், அதற்கு முன்பாகவே அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரிக்கிறது.
"அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு பாலா மீண்டும் களமிறங்கி உள்ளார். அதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது," என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.
இதற்கிடையே சூர்யாவின் தம்பி கார்த்தி 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு இரட்டை வேடங்கள் எனத் தெரிய வந்துள்ளது.
சரி, முக்கிய விஷயத்தைப் பார்ப்போம். தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அதை முடித்தவுடன் கொம்பன் முத்தையா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
அதை முடித்த பிறகே 'சர்தார்' வேலைகளில் ஈடுபடுவாராம்.
கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் அதிகமாம்.
'சர்தார்' படத்தில் வயதான வேடத்திலும் தோன்றுவார் கார்த்தி. இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார் நடிகர் வடிவேலு. இது முன்னணி ஓடிடி நிறுவனத்தின் தயாரிப்பாம்.
முழுநீள நகைச்சுவை நிகழ்ச்சியாக உருவாகிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் உள்ள சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களை அடையாளம் காண்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாம்.

