திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
3119002c-f78f-4b1e-afb8-2c59db6e6fe2
-
multi-img1 of 2

ஹன்சிகா மட்டுமே நடிக்கும் படம்

வித்தியாசமான கதைகளாகத் தேடிப்பிடித்து நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் ஹன்சிகா. அவர் நடிப்பில் உருவாகி வரும் '105 நிமிடம்' என்ற திகில் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது.

ராஜா துஸ்ஸா இயக்கும் இப்படத்தி்ல் ஹன்சிகா மட்டுமே நடிக்கிறாராம். வேறு கதாபாத்திரங்கள் திரையில் தோன்றாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளனர். படம் முழுவதும் ஒரே காட்சிதான் இருக்கும். ஆனால் மொத்தக் கதையையும் அந்த ஒரு காட்சியிலேயே விவரிக்கப் போகிறார்கள்.

அண்மையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியில் ஹன்சிகா மோத்வானி உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் காட்சி அளிப்பது ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இதற்கிடையே, 'மை நேம் இஸ் சுருதி' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் ஹன்சிகா.

நடிகர் காளிதாஸ் காலமானார்

நடிகரும் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞருமான காளிதாஸ் காலமானார். அவருக்கு வயது 64.

கடந்த 1980களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞராக திரையுலகில் அறிமுகமானார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களுக்குதான் இவர் அதிக அளவில் இரவல் குரல் கொடுத்துள்ளார். பின்னர் திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி இருந்தவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

மறுபதிப்பாகும் 'ஒத்த செருப்பு'

பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த 'ஒத்த செருப்பு' படம் இந்தியில் மறுபதிப்பாகிறது. அவரே இயக்குகிறார்.

பல்வேறு விருதுகளையும் பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ள இப்படத்தின் இந்தி மறுபதிப்பில் அபிஷேக் பச்சன் நடிப்பது உறுதியாகி உள்ளது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாகத் தகவல்.