ஒருபக்கம் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியைக் கொண்டாடி வரும் ஆர்யாவை மறுபக்கம் சில பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன. ஆனால் அவர் வழக்கம்போல் வலம் வருகிறார்.
"அதுதான் ஆர்யா. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர் எதற்காகவும் அலட்டிக்கொள்ளவே மாட்டார். எப்போதும் அமைதியாகவும் ஜாலியாகவும் இருப்பதுதான் ஆர்யாவின் வழக்கம்," என்கிறார்கள் அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார், ரூ.71 லட்சம் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பித் தராமல் மோசடி செய்தார் என்று நடிகர் ஆர்யா மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரைப்பட நடிகராவதற்கு தாம் எதிர்கொண்ட சிரமங்கள், அவமானங்கள், ஏமாற்றங்கள் குறித்து அண்மைய பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார் ஆர்யா.
சிறு வயதில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் பலரும் இவரைக் கிண்டல் செய்துள்ளனர். அதனால் ஏற்பட்ட வருத்தத்தைவிட, ஒல்லியாக இருப்பதைக் காரணமாகக் கூறி ஓர் இளம்பெண் இவரது காதலை ஏற்க மறுத்துவிட்டாராம்.
"அப்போது மனதில் ஒருவித வெறி ஏற்பட்டது. பதினாறு வயதில் உடற்பயிற்சிக் கூடத்துக்குள் நுழைந்தேன். என் உடல் முறுக்கேறும் வரை பயிற்சியை நிறுத்தவில்லை. பிறகுதான் என் மன வேதனை குறைந்தது.
"பிறகு அப்பாவின் விருப்பத்துக்காக பொறியியல் படித்தேன். படிப்பை முடித்ததும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
"என் உடல்வாகு காரணமாக விளம்பரங்களில் நடிக்கவும் மாடலிங் செய்யவும் அவ்வப்போது வாய்ப்புகள் தேடிவரும். கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்து, நூறு ரூபாய் கொடுப்பார்கள். அதற்காக வருத்தப்பட்டதில்லை. அது கைச்செலவுக்கு உதவியாக இருந்தது," என்கிறார் ஆர்யா.
இந்தச் சமயத்தில்தான் சினிமா வாய்ப்பும் தேடி வந்ததாம். ஒரு தமிழ்ப் படத்தில் சிறிய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் ஏற்கலாம் என்று ஆர்யா முடிவு செய்திருந்த நேரத்தில்தான் இயக்குநர் ஜீவாவின் பார்வை இவர் மீது விழுந்தது.
"அவர் இயக்கிய 'உள்ளம் கேட்குமே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார். ஆனால் படப்பிடிப்பின்போது அவரிடம் பலமுறை திட்டு வாங்கினேன். எனக்கு நடிப்பும் வரவில்லை, சிரிப்பும் வரவில்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
"சிறிய காட்சிகளுக்கும் கூட 30, 40 டேக் ஆனதால் ஒருகட்டத்தில் அவருக்கு மட்டுமல்ல, எனக்கே வெறுத்துப் போய்விட்டது. நடிப்பதைவிட எங்காவது ஓடிப்போய்விடலாம் என்று கூட தோன்றியது," என்று கடந்த காலத்தை நினைவுகூர்கிறார் ஆர்யா.
அப்போது உதவி இயக்குநர் ஒருவர்தான் இவருக்கு ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டினாராம். அவரது அறிவுரைப்படியே தீவிரப் பயிற்சி மேற்கொண்டு, நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றறிந்துள்ளார்.
"கடும் பயிற்சிக்குப் பிறகு பலருடைய பாராட்டுகளைப் பெற்றேன். இயக்குநர் ஜீவாவும் வாழ்த்தினார். அந்த படத்துக்கு பிறகு என் தலை எழுத்தே மாறிவிடும் என்று நினைத்தேன். ஆனால் 'உள்ளம் கேட்குமே' படம் வெளியாக மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. யாரும் நடிக்க அழைக்கவில்லை.
"எனக்கான வாய்ப்புகளைத் தேடி சென்னையில் உள்ள படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடையாய் நடந்திருக்கிறேன். பல்வேறு வகையிலும் அவமானங்களைச் சந்தித்தேன்.
"அப்போதுதான் எந்தப் பின்னணியும் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது," என்கிறார் ஆர்யா.
சுமார் இரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்த பிறகே இயக்குநர் விஷ்ணுவர்தனின் 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' பட வாய்ப்புகள் கிடைக்க, ஆர்யா குறித்து கோடம்பாக்கத்துக்கு தெரியவந்தது.
அதுமட்டுமல்ல, 'உள்ளம் கேட்குமே' உட்பட அம்மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றதும் நிலைமை அடியோடு மாறியது.
"பல வாய்ப்புகள் கிடைத்தன. இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்கும் அளவுக்கு என் வளர்ச்சி இருந்தது. 2018க்குப் பிறகு மீண்டும் வாய்ப்புகள் குறைந்தன.
"இப்போது 'சார்பட்டா பரம்பரை'யின் வெற்றி மீண்டும் என்னைப் பற்றி ரசிகர்களைப் பேச வைத்துள்ளது," என்கிறார் ஆர்யா.

