ஆச்சரியத்தில் மூழ்கிய அஞ்சலி

ஆச்சரியத்தில் மூழ்கிய அஞ்சலி

3 mins read
811d4167-83a3-45a6-82d9-24549572328c
-

தமிழ் சினிமா உலகில் சிலருக்கு அமையும் எதிர்பாராத வாய்ப்புகள் அவர்களுக்கு மட்டுமல்ல, சகக் கலைஞர்கள், ரசிகர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

நடிகை அஞ்சலிக்கு (படம்) கிடைத்துள்ள புது வாய்ப்பு ஒன்று, இப்படியோர் ஆச்சரியத்தை தந்துள்ளது.

அண்மைக்காலமாக அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையவில்லை.

எனவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் தெலுங்கில் இவர் நடித்த 'வக்கீல் சாப்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தெலுங்கு முன்னணி நாயகர்களில் ஒருவரான ராம் சரணின் அடுத்த படத்தில் அஞ்சலியை முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் அவர் உற்சாகத்தில் மிதக்கிறார். காரணம் இது பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கும் படம்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் அஞ்சலிக்குப் பதில் வேறொரு நடிகையைத்தான் படக்குழு முதலில் பரிசீலித்ததாம்.

எனினும், 'வக்கீல் சாப்' படத்தில் அஞ்சலியின் நடிப்பு நன்றாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளதை அடுத்து, அவரை ஒப்பந்தம் செய்யலாம் எனப் படத் தயாரிப்புத் தரப்பு கூறியதை சங்கரும் ஏற்றுக் கொண்டாராம்.

இந்தப் படத்தில் வடஇந்திய நடிகை கியாரா அத்வானி தான் நாயகி என்றாலும், அஞ்சலியின் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மிக விரைவில் இந்தப் படம் குறித்த பல்வேறு அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாக என எதிர்பார்க்கப் படுகிறது.

'அண்ணாத்த' படம் வெளியான பிறகு தமிழில் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இயக்குநர் பாலாவின் தொலைபேசி அழைப்பு அவரது இந்த முடிவை மாற்றிவிட்டது. இது தாம் எதிர்பார்க்காத பெரிய வாய்ப்பு என்கிறார் கீர்த்தி.

இப்போது இயக்குநர் செல்வராகவனுடன் 'சாணிக்காயிதம்' படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. இது தவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் 'அரபிக்கடலின் சிங்கம்', தெலுங்கில் மகேஷ்பாபு உடன் 'சர்காரு வாரி பாட்டா' போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தயாரிப்பில், பாலா இயக்க உள்ள புதிய படத்தில் கீர்த்திதான் நாயகியாம். பாலா படத்தின் கதையைச் சொல்வதற்கு முன்பே கால்ஷீட் ஒதுக்க தயாராகிவிட்டாராம் கீர்த்தி.

பிறகு, தனது கதாபாத்திரம் குறித்து முழுமையாக அறிந்த பின்னர், அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டதாகவும் தகவல்.

சூர்யாவுடன் 'சூரரைப் போற்று' படத்தில் இணைந்து நடித்த அபர்ணா முரளி, இப்போது அவரது இளைய சகோதரரான கார்த்தியுடனும் ஜோடி சேர உள்ளார்.

சூர்யா படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. மிக இயல்பாக நடிப்பதாக விமர்சகர்களும் அவரைப் பாராட்டினர்.

இந்நிலையில், 'கொம்பன்' பட இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, அவரது இணையாக அபர்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இது கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படமாம். அபர்ணா மண்வாசனையுடன் கூடிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

மேலும், வட்டார மொழியில் பேசி நடிக்க வேண்டும் என்றாலும் அதற்குத் தயாராக உள்ளாராம் அபர்ணா.

இதுபோன்ற சவால்கள் தமக்குப் மிகவும் பிடிக்கும் என்றும் உற்சாகத்துடன் சொல்கிறார்.