தடைகள்: கொந்தளிக்கும் சிம்பு குடும்பம்

தடைகள்: கொந்தளிக்கும் சிம்பு குடும்பம்

2 mins read
b2604718-ea00-4c27-926e-b48cbba6d5ca
'மாநாடு' படத்தின் சுவரொட்டியில் சிம்பு. -

சிம்பு நடிக்கும் புதுப்படங்களுக்குத் தொடர்ந்து பல்வேறு வகையிலும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

அவர் நடித்த முந்தைய படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களை அவர் ஏதேனும் ஒரு வகையில் ஈடுகட்ட வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்துகிறார்கள்.

சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் பழைய படங்களுக்கான பஞ்சாயத்தை முடிக்காமல் இனி நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதிக்கவே, சிம்பு தரப்பு பொங்கி எழுந்துள்ளது.

தன் மகனுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் இது தொடர்பாக பிரதமர் மோடியையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து முறையிடப் போவதாகவும் சிம்பு தாயார் உஷா ராஜேந்தர் கொந்தளிக்கிறார்.

"தன்னைப் பற்றி மிக இழிவாகப் பேசிய ஒரு தயாரிப்பாளர் மீது சிம்பு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்ட தயாரிப்பாளருக்காக சிம்பு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். திரையுலக சங்கங்களுக்கு நீதிமன்றங்களைவிட அதிக அதிகாரங்கள் உள்ளனவா?

"இதை தட்டிக்கேட்டால் முதல்வர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் எங்கள் கைப்பையில் என்று சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் இதை நம்ப மாட்டோம். முதல்வர் ஸ்டாலின் இப்படியொரு விஷயத்துக்கு துணைபோக மாட்டார்," என்கிறார் உஷா ராஜேந்தர்.

இதற்கிடையே, வெந்து தணிந்தது காடு படத் தலைப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் மதிசுதாவும் தனது படத்துக்கு இதே தலைப்பைச் சூட்டியுள்ளார். கௌதம் மேனன் தனது படத்தலைப்பை அறிவித்ததால் மதிசுதா கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இரு படங்களுக்கும் ஒரே தலைப்பு என்றால் இணையத்தில் நேரடியாகப் படத்தை வெளியிடும்போது சிக்கல் ஏற்படும். இதையடுத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனது படத்துக்கு 'ஈழத்தின் வெந்து தணிந்தது காடு' என்று புதுத் தலைப்பை வைத்துள்ளார் மதிசுதா.