படங்கள் மூலம் பதிலடி தந்த சிம்பு
நடிகர் சிம்பு படப்பிடிப்புகளுக்குத் தாமதமாக வருவதாகவும் இயக்குநர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் சிலர் குறைகூறத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு விமர்சிப்பவர்களுக்குத் தனது புகைப்படங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் சிம்பு.
இப்போது உள்ள கச்சிதமான உடற்கட்டுடன் இருப்பதையும் முன்பு உடல் பெருத்து இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அருகருகே வைத்து சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இப்படங்களைக் கண்டு வியந்த ஏராளமானோர், அவரது கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்தப் புகைப்படத்தைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இப்போது தாம் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்காக பதினைந்து கிலோ எடை குறைந்துள்ள சிம்பு, 'மாநாடு' படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கி றாராம். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மீண்டும் தன்னைப் பற்றி ரசிகர்களை அதிகம் பேச வைக்கும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் சிம்பு.
இதனால் அந்த வசனங்கள் குறித்து அறிய அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
திடீர் எதிர்ப்பு: கவலைப்படாத ராதிகா
சமூக வலைத்தளங்களில் திடீரென நடிகை ராதிகா ஆப்தேவை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர் தேவையின்றி தனது ஆபாசப் படங்களைப் பதிவிடுவதாக பலர் குறைகூறி உள்ளனர்.
ஆபாசப் படம் எடுத்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா அண்மையில் கைதானார்.
இதைச் சுட்டிக்காட்டி உள்ள சிலர், ஆபாசமாக நடிப்பதும் குற்றம்தான் என்றும் இதற்காக ராதிகா ஆப்தேவைக் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ எதுகுறித்தும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வருகிறார்.

