'பீஸ்ட்' படப்பிடிப்புத்தளம் மிகுந்த உற்சாக உணர்வைத் தருவதாக இருந்தது என்கிறார் அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே.
விஜய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக படப்பிடிப்பை பாதியில் நிறுத்த வேண்டி இருந்ததாம்.
இதனால் தாம் மும்பை திரும்பிவிட்டதாகவும் அதனால் ஏமாற்றமாக உணர்ந்ததாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பூஜா.
'பீஸ்ட்' படத்தில் நிறைய அதிரடி சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் தமக்கும் உள்ளது என்றும் கூறுகிறார் பூஜா.
"எனது நேர்காணலைப் பார்த்த பிறகாவது இயக்குநர் நெல்சன் என்னையும் சண்டைக்காட்சியில் நடிக்க வைப்பார் என நம்புகிறேன். இதற்காக சண்டைப் பயிற்சி பெறவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
"படப்பிடிப்பு தளம் மகிழ்ச்சியான இடமாக இருப்பதால் இதுவரை கிடைத்த அனுபவம் மனநிறைவு தருகிறது," என்கிறார் பூஜா.
விஜய் எதற்கும் பதற்றமடைய மாட்டார் என்றும் அவரைப் போல் பொறுமையான, அலட்டிக்கொள்ளாத நாயகர்களைப் பார்ப்பது அரிது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், விஜய்யின் அமைதியான போக்கு சுற்றி உள்ளவர்கள் மீதும் ஒருவித நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
"விஜய்யுடன் நடிக்கும்போது படப்பிடிப்புத்தளம் அருமையான சூழல் உள்ள இடமாக மாறிவிடுகிறது. இயக்குநர் நெல்சனும் அந்தச் சூழலை மேம்படுத்துகிறார்," என்கிறார் பூஜா.
படப்பிடிப்பில் இருந்து கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் மனதில் அறவே எழாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த முறை சென்னையில் பெய்த மழை காரணமாக படப்பிடிப்பு விரைவாக முடிக்கப்பட்டதாக ஆதங்கப்படுகிறார்.
"படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் மும்பை திரும்பிவிட்டேன். அதனால் ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பிறகு வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்று தோன்றாத, படக்குழுவைப் பிரிய விரும்பாத, அதிகம் வேலை செய்ய விரும்புகிற படப்பிடிப்புத் தளங்களே ஆகச் சிறந்தவை என்பது என் கருத்து. 'பீஸ்ட்' அப்படியான ஓர் அனுபவத்தையே தந்துள்ளது.
"வாய்ப்பும் நேரமும் அமைந்தால் இதே படக்குழுவுடன் பணியாற்ற நான் தயார். இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்கும். தெலுங்கு ரசிகர்களைப் போலவே தமிழ் ரசிகர்களும் அன்பானவர்கள்," என்கிறார் பூஜா ஹெக்டே.

