திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
d5305eb9-7fbb-4d7b-9285-3d06e0e99701
-
multi-img1 of 3

மகிழ்ச்சியில் திளைக்கும் ஊர்வசி

தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரான 'லெஜண்ட்' சரவணன் நடிக்கும் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளதாக அப்படத்தின் நாயகி ஊர்வசி ரவ்துலா தெரிவித்துள்ளார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜேடி, ஜொர்ரி இயக்கி உள்ளனர். இவர்கள் ஏற்கெனவே 'உல்லாசம்', 'விசில்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளனர். யோகிபாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

நாயகனாக நடிப்பதுடன், இந்தப் படத்தை தயாரிப்பதும் 'லெஜண்ட்' சரவணன் தான். பெரும் தொகை கொடுத்து இந்தி நடிகை ஊர்வசி ரவ்துலாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரும் தன் பங்குக்கு படத்தை நன்றாக விளம்பரப்படுத்தி வருகிறார்.

"இது நான் தமிழில் அறிமுகமாகும் படம். அதனால் மனதில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வெற்றிகராக முடித்துள்ளோம். அதற்காகப் படக்குழுவுக்கு நன்றி. ஐந்து மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ஊர்வசி ரவ்துலா.

தெலுங்கில் அசத்தும் வரலட்சுமி

திடீரென தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். அவர் நடிப்பில் வெளியான ஆறு படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளன.

படத்தின் வசூல் நிலவரம் தெலுங்கு திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. சூட்டோடு சூடாக தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் வரலட்சுமி.

முன்பு ஐம்பது லட்சம் ரூபாய் பெற்று வந்தவர், அடுத்த படத்துக்கான சம்பளம் என குறிப்பிட்டு பத்து விரல்களை விரிக்கிறாராம். ஆனால் அதைக் கொடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாகத் தகவல்.

குறுகிய காலத்தில் தெலுங்கில் ஆறு, கன்னடத்தில் ஐந்து, மலையாளத்தில் இரண்டு என பதிமூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார் வரலட்சுமி. எனினும் தமிழில் இன்னும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளதாம்.

தற்போது, 'பிறந்தாள் பராசக்தி,' 'கலர்ஸ்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

முன்னோட்ட காட்சிகள் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சியான் 60' படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பும் முதல் தோற்றச் சுவரொட்டியும் வரும் 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது ரவுடிக் கும்பலை மையமாக வைத்து உருவாகிறது. அதனால் அதிரடித் திருப்பங்களும் சண்டைக் காட்சிகளும் நிறைந்த படமாக இருக்கும் என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கி றார். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'சியான் 60' படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகிறது.