தனுஷ் போன்ற நடிகர்களுடன் பணியாற்றுவதன் மூலம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'மாறன்' படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக மாளவிகா நடிக்கிறார்.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், தனுஷுடன் பணியாற்றும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை விவரித்துள்ளார் கார்த்திக் நரேன்.
"இந்தப் படம் என்னுடைய படமாக இருக்குமா, அல்லது தனுஷ் படமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இருவரது படமாகவும் இருக்கும் என்பதே அதற்கான பதில்.
"இந்தப் படத்துக்காக இதுவரை நடந்தவை அனைத்துமே சரியாக அமைந்துள்ளன. தனுஷ் ரசிகர்கள் அவரிடம் இருந்து எதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்பது எனக்கும் அத்துப்படி. அந்த விஷயத்தில் எந்தக் குறையும் இருக்காது.
"அதேசமயம் எனது தனிப்பட்ட முத்திரையையும் ஆங்காங்கே பதித்துள்ளேன். படம் பார்க்கும்போது அதை உங்களால் உணர முடியும்.
"தனுஷ் சாரை பொறுத்தவரையில் எனது பணியில் எந்த வகையிலும் குறுக்கிட்டதே இல்லை. எந்தவொரு காட்சி அல்லது வசனத்தை மாற்ற வேண்டும் என்றும் சொன்னது இல்லை," என்கிறார் கார்த்திக் நரேன்.
அருண் விஜய் நடித்து வெற்றிபெற்ற 'மாஃபியா' படத்தை இவர் இயக்கிக் கொண்டிருந்த போதுதான் தனுஷிடம் 'மாறன்' கதையை படிக்கக் கொடுத்திருந்தாராம். அடுத்த சில தினங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நல்ல கதை எனப் பாராட்டியதுடன், நடிக்கவும் சம்மதித்துள்ளார் தனுஷ்.
"மற்றபடி படப்பிடிப்பு ஏற்பாடுகள் தொடங்கி இதுவரை படமாக்கப்பட்ட பகுதி வரை எதிலும் அவர் தலையிடவில்லை. இந்தக் கதையை அவரை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதினேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தனக்கான கதாபாத்திரத்துடன் நூறு விழுக்காடு பொருந்தி உள்ளார் தனுஷ்.
"அது மட்டுமல்ல, ஒரு படத்தை உருவாக்க ஒரு கதாநாயகனின் பங்களிப்பு எந்த அளவு இருக்க வேண்டுமோ, அதற்கும் அதிகமாகவே ஒத்துழைத்துள்ளார். இந்தப் படம் எங்கள் இருவருக்குமே வெற்றியைத் தரும் என நம்புகிறேன்," என்கிறார் கார்த்திக்.
'மாறன்' படத்தில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும் என்பவர், அவை எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்கிறார்.
இவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. தமது அடுத்தடுத்த படங்களின் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறார் கார்த்திக் நரேன்.
இவரது இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்த 'நரகாசூரன்' விரைவில் வெளியாக உள்ளது.

