'திறமை ஒன்றே போதும்'

3 mins read
6caf4571-bd68-449f-8200-84bf2ff208b1
-

நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­கும் திரைப்­படங்­க­ளின் வசூல் நில­வ­ரம் திருப்­தி­க­ர­மாக இல்லை என்று கோடம்­பாக்­கத்­தில் ஒரு பேச்சு அடி­படும் வேளை­யில், 'ஓடிடி' தளங்­க­ளுக்கு ஆத­ர­வா­கப் பேசு­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ். அதற்­கான கார­ணங்­க­ளை­யும் கச்­சி­த­மாக முன்­வைக்­கிறார்.

ஐஸ்­வர்யா நடித்த 'க/பெ.ரண­சிங்­கம்' படம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யீடு கண்­டது. நாய­கி­யாக மையப்­ப­டுத்தி எடுக்கப்­பட்ட இந்­தப் படத்தை 199 ரூபாய் கட்­ட­ணம் செலுத்தி பத்து லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் பார்த்­துள்­ள­னர். இதன் மூலம் தயா­ரிப்­புத் தரப்­புக்கு இரு­பது கோடி ரூபாய் கிடைத்­துள்­ள­தாம்.

எனவே நேர­டி­யாக 'ஓடிடி'க்காக தயா­ரா­கும் படங்­களில் நடிப்­ப­தில் தமக்கு எந்­த­வித தயக்­க­மும் இல்லை என்­கி­றார்.

ஐஸ்­வர்யா நடித்­துள்ள 'திட்­டம் இரண்டு' படம் அண்மையில் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாகி வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து 'பூமிகா' என்ற இன்­னொரு திகில் பட­மும் இணைய வழி வெளி­யீட்­டிற்­காக காத்­தி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில் தெலுங்­கி­லும் வர­வேற்பு இருப்­ப­தால், தென்­னிந்­திய மொழி­களில் தவிர்க்க முடி­யாத நாய­கி­யாக உரு­வெ­டுத்­துள்­ளார் ஐஸ்­வர்யா. மேலும், நாய­கியை மையப்படுத்­தும் கதை­க­ளாகத் தேர்வு செய்து நடிப்­ப­தால், நயன்­தா­ரா­வுக்­குப் போட்­டி­யா­கச் செயல்­ப­டு­வ­தாக கோடம்­பாக்­கத்­தில் பேசப்­ப­டு­கிறது. ஆனால் அது உண்­மை­யல்ல என்று ஐஸ்­வர்யா தரப்­பில் கூறப்­படு­கிறது.

"என்­னைத் தேடி பல கதை­கள் வரு­கின்­றன. அவற்­றில் பெரும்­பான்­மை­யான கதை­களில் நாய­கிக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இது நானே எதிர்­பா­ராத ஒன்று. பல சம­யங்­களில் இதை நினைத்து ஆச்­ச­ரி­யப்­பட்­டி­ருக்­கி­றேன்.

"ஒரு படத்­தின் இயக்­கு­ந­ரும் தயா­ரிப்­பா­ள­ரும்­தான் யார் யார் அதில் நடிக்க வேண்­டும் எனத் தீர்­மா­னிக்­கி­றார்­கள். என் கையில் எது­வும் இல்லை. அதே­போல் கதை­களை தேர்வு செய்­வ­தும் தயா­ரிப்­பார்­கள்தான். இந்­தப் பெருந்­தொற்று நெருக்­கடி வேளை­யில் தயா­ரிப்­பா­ளர்­களும் கடும் இழப்­பு­களைச் சந்­தித்­துள்­ள­னர். அவர்­களில் பலர் கடன் வாங்­கி­தான் படம் தயா­ரிக்­கின்­ற­னர். வட்­டித் தொகை­யைக் கட்­டப்போவ­தும் அவர்­கள்­தான்.

"தமி­ழ­கத்­தில் உட­ன­டி­யாக திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டா­லும் மக்­கள் கொரோனா அச்­சத்தை மீறி அதே வேகத்தில் படம் பார்க்க வரு­வார்­களா என்­பது சந்­தே­கம்­தான். யாரை­யும் கட்­டா­யப்­ப­டுத்தி திரை­ய­ரங்­குக்கு வர­வ­ழைக்க இய­லாது. எனவே எல்­லோ­ருக்­குமே மூச்சு விட்­டுக்­கொள்ள கொஞ்­சம் அவ­கா­சம் தேவை.

"இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் 'ஓடிடி' தளங்­கள் பாது­காப்­பான பொழு­து­போக்கு தள­மாக மாறி­யுள்­ளது" என்­கி­றார் ஐஸ்­வர்யா.

'ஓடிடி' தளம், திரை­ய­ரங்­கு­கள் என எது­வாக இருந்­தா­லும் தமக்கு தயக்­க­மில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், தன்னை நம்பி படம் தயா­ரிப்­ப­வர்­களும் இயக்­கு­நர்­களும் நஷ்­டம் அடை­யா­மல் இருந்­தால் அதுவே போதும் என்­கி­றார்.

"நான் நயன்­தா­ரா­வுக்கு போட்டி என்­ப­தெல்­லாம் கொஞ்­சம் அதி­கப்­படி என்­பேன். உண்­மை­யில், போட்டி என்­ப­தில் எனக்கு நம்­பிக்­கையே இல்லை. இங்கு திறமை இருந்­தால் மட்­டுமே நிலைத்து நிற்க முடி­யும். எனது அனு­ப­வத்தை வைத்­துத்­தான் இவ்­வாறு சொல்­கி­றேன்.

"முன்பு நான் நடித்த 'கனா' படம் வெளி­யா­ன­போது மேலும் ஐந்து படங்­கள் வெளி­யீடு கண்­டன. இத­னால் 'கனா'வை திரை­யிட ஒப்­புக்­கொண்ட பல திரை­ய­ரங்­கு­க­ளின் நிர்­வாக தரப்­பி­னர் திடீ­ரென பின்­வாங்­கி­னர். குறிப்­பிட்ட தேதி­களில் எங்­கள் படத்­துக்கு ஒரு காட்­சி­யைக் கூட ஒதுக்க இய­லாது என கைவி­ரித்­த­னர்.

"ஆனால் 'கனா' படத்­தின் தயா­ரிப்­பா­ளர் சிவ­கார்த்­தி­கே­யன், படம் அறி­விக்­கப்­பட்ட தேதி­யில் வெளி­யாக வேண்­டும் என முடி­வெ­டுத்­தார். அதன்­படி சில திரை­ய­ரங்­கு­களில் மட்­டுமே படம் திரை­யி­டப்­பட்­டது.

"தர­மான படைப்பு என்­பதை உணர்ந்த ரசி­கர்­கள் படை­யெ­டுக்­கவே, அந்­தப் படத்தை திரை­யிட்ட திரை­ய­ரங்­கு­க­ளின் எண்­ணிக்கை எந்த விளம்­ப­ர­மும் இன்றி மள­ம­ள­வென அதி­க­ரித்­தது. அப்­போது­தான் தர­மும் திற­மை­யும் இருந்­தாலே போது­மா­னது, திரைத்­து­றை­யில் சாதிக்க முடி­யும் என்­பதை உணர்ந்துகொண்­டேன். திரை­யு­ல­கில் இது எனக்கு மகிழ்ச்­சி­யான கால­கட்­டம்," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

ஐஸ்வர்யா ராஜேஷ்