திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read

'நெற்றிக்கண்' மறுபதிப்பில் அனுஷ்கா

மீண்டும் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கத் தயாராகிவிட்டார் அனுஷ்கா. தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நெற்றிக்கண்' படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைக்காலமாக திரைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளார் அனுஷ்கா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'சைலன்ஸ்'. அதன் பிறகு எந்தப் படத்திலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில் 'நெற்றிக்கண்' படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். தமிழில் இப்படத்தை தயாரித்த நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன்தான் தெலுங்கிலும் தயாரிக்கிறார். இது தொடர்பாக அனுஷ்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்.

இயக்குநர் நெல்சனைப் பாராட்டிய விஜய்

பல நாள்களாக எதிர்பார்த்த தகவல் இப்போது வந்திருக்கிறது. வேறொன்றும் இல்லை... பீஸ்ட் படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்கின்றனர்.

சென்னையில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு எந்தவித சிக்கலும் தாமதமும் இன்றி நடந்ததால் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை வெகுவாகப் பாராட்டினாராம் விஜய்.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிறகே அங்கு செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என்கிறது இயக்குநர் தரப்பு. அங்கே ஒரு பாடல், இரண்டு சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தகவல்.

"விஜய் சார் எல்லோரையும் மனதாரப் பாராட்டுவார். ஆனால் அதற்கு நூறு விழுக்காடு சரியாகச் செயல்பட வேண்டும். அவருடைய பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி," என்கிறார் இயக்குநர் நெல்சன்.