"இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்னர் பயிற்சிப் பட்டறை நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
"இதனால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்தேறும் என்பதுடன் தயாரிப்பாளருக்கு பெரும் தொகை மிச்சமாகும். அதனால் இத்தகைய பயிற்சிப் பட்டறையை ஆதரிக்கிறேன்," என்கிறார் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண்.
இவரை இவ்வாறு சொல்ல வைத்திருப்பது 'ஓ மணப்பெண்ணே' படத்தில் கிடைத்த அனுபவம்.
கார்த்திக் சுந்தர் இயக்கும் இந்தப் படத்தின் பயிற்சிப் பட்டறையில்தான் சமையல் கலையின் பல்வேறு முக்கிய நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டாராம்.
'ஓ மணப்பெண்ணே' படத்தில் சமையல் கலை நிபுணராக நடித்துள்ளார் ஹரிஷ். இது தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'பெள்ளி சூப்புலு' படத்தின் மறுபதிப்பாக உருவாகிறது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
"சில காட்சிகள் நான் சமையல் செய்வது போல் உள்ளன. அவை இயல்பாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் குறியாக இருந்தார். சமையல் என்பதை எல்லோருமே சாதாரணமாக கருதுகிறோம். ஆனால் அதில் ஏராளமான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன.
"அதே போல் சமையல் செய்யும்போது பிறரின் கவனத்தை ஈர்ப்பது தனி கலை. அதை இந்தப் படத்தின் மூலம் உணர்ந்துகொண்டேன்," என்கிறார் ஹரிஷ்.
இந்தப் படம் பிரபல தொழிலதிபர் சித்தாந்த் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு முன்பு அவரைச் சந்தித்துள்ளார் ஹரிஷ். அப்போது சமையல் கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தாராம் சித்தாந்த்.
"சமையலுக்காக கத்தியைக் கையில் பிடிப்பதும் கூட அழகாக இருக்க வேண்டும் என்றும் கத்தியை எவ்வாறு லாவகமாகப் பிடிக்க வேண்டும் என்பதை அவர் விவரித்தபோது ஆச்சரியமாக இருந்தது. நாம் வீட்டில் சமைப்பதற்கும் பெரிய உணவகங்கள், தங்கும் விடுதிகளில் உணவு தயாரிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
"எது எப்படியோ, இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நானும் சமையல் கலைஞர் ஆகிவிட்டேன்," என்று உற்சாகத்துடன் சொல்லும் ஹரிஷ், இப்போது கோழி, மீன்களைக் கொண்டு பல்வேறு அசைவ உணவு வகைகளைச் சமைத்து அசத்துகிறார்.
பர்கர், சமோசா, வறுவல் வகைகள் ஆகியவற்றிலும் கைதேர்ந்துள்ளார். இவரது சமையல் பக்குவத்தைக் கண்டு குடும்பத்தாரும் நண்பர்களும் மலைத்துப்போய் உள்ளனராம்.
படத்தில் சமையல் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கும் தினங்களில், படப்பிடிப்புக்கு முன்கூட்டியே சென்று, தன் கையால் சில உணவுகளைச் சமைத்துப் பார்த்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார். அவரது இந்த அர்ப்பணிப்பை அனைத்து இளம் நடிகர்களிடமும் எதிர்பார்க்க இயலாது என்று பாராட்டுகிறார் இயக்குநர்.
"நான் சமைத்து வைத்த உணவு திரையில் சில நொடிகள் தான் வரும். ஆனால் சமைக்கும்போது நான் வெளிப்படுத்த வேண்டிய உடல்மொழி, சமையல் பொருள்களை நான் கையாளும் விதம் ஆகியவை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இவ்வாறு செய்தேன். பிரியா பவானி சங்கரும் என் தாயாரும்கூட சில விஷயங்களைக் கற்றுக்கொடுத்தனர். அதனால் எனது கதாபாத்திரத்தை நன்கு மெருகேற்ற முடிந்தது," என்கிறார் ஹரிஷ்.
, :