ஜோதிகாவின் ஐம்பதாவது படமாக உருவாகி வருகிறது 'உடன்பிறப்பே'. 'கத்துக்குட்டி' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இரா. சரவணன் இயக்கும் இரண்டாவது படம் இது.
இது ஜோதிகாவுக்கு ஐம்பதாவது படம் என்பதால் தமக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என்கிறார் சரவணன். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் இந்த விவரம் இவருக்குத் தெரிய வந்ததாம்.
"தனது ஐம்பதாவது படத்தை இயக்கும் பொறுப்பை அவர் என்னிடம் ஒப்படைத்துள்ளார் என்பது பெருமை தரும் விஷயம். அந்த அளவுக்கு அவருக்கு என் கதை மீது நம்பிக்கையாகவும் இந்த வாய்ப்பை பார்க்கிறேன்.
"தமிழகத்தில் கஜா புயல் வீசியபோது, சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் பரமுவும் அவரது குழுவினரும் எங்களுடைய கிராமங்களுக்கு வந்தனர்.
'அப்போது ஒரு வீட்டுச்சுவரில் மாட்டப்பட்டு இருந்த நாளேட்டில் மகாலட்சுமியின் புகைப்படத்தின் மீது ஜோதிகா படத்தை ஒட்டி வைத்திருந்தனர்.
'அதைக் கண்டு ரசிகர் மன்றத்தினருக்கு ஆச்சரியம்.
"அந்த அளவுக்கு கிராமங்களில் ஜோதிகாவை மரியாதையும் அன்புமாகப் பார்க்கிறார்கள்.அந்த அன்பை இந்தப் படம் பன்மடங்காக அதிகரிக்கும் என நம்புகிறேன்.
'இந்தப் படத்தில் நெஞ்சைப் பிழியும் வசனங்கள் இருக்காது. ஆனால், வெறும் பார்வையாலும் தத்தளிப்பை வெளிப்படுத்தும் முக பாவங்களாலும் நம்மை கண்கலங்கச் செய்துவிடுவார் ஜோதிகா. அதனால்தான் அவரை தங்கள் மண்சார்ந்த மனுஷியாக மக்கள் பார்க்கிறார்கள். அவரும் அதுவாகவே மாறி இருக்கிறார்," என்கிறார் இரா.சரவணன்.
படப்பிடிப்பைத் தொடங்கும் முன்னர் கம்பீரமான கிராமத்துப் பெண்ணாக ஒப்பனை போட வேண்டும் என்று ஜோதிகாவிடம் கேட்டுக் கொண்டாராம்.
மேலும், எப்படி தோற்றமளிக்க வேண்டும் என்பதை சிறு கோடுகளைக் கொண்ட சிறிய ஓவியமாக வரைந்து காட்டினாராம். மறுநாள் ஜோதிகா அதேபோன்ற தோற்றம், ஒப்பனையுடன் வந்து அசத்தினாராம்.
இரட்டை மூக்குத்தி, தங்கச்சங்கிலி நெற்றிப்பொட்டு என தனது கதாபாத்திரத்துக்காக அச்சு அசல் தஞ்சாவூர்த் தமிழச்சியாக மாறிஉள்ளார் ஜோதிகா.
"ஒப்பனை தொடங்கி தனக்கான உடைகள் வரை அனைத்தும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக உள்ளார். முதல் நாள் ஜோதிகா வந்தபோது படப்பிடிப்பைப் பார்க்கத் திரண்டு நின்ற கிராமத்து மக்களே அசந்துபோயினர்," என்கிறார் சரவணன்.
'உடன்பிறப்பே' படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி என்று பல முன்னணி நடிகர்களும் உள்ளனர். அனைவருமே கனமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அதனால் ரசிகர்கள் தரமான படைப்பை எதிர்பார்க்கலாம் என உத்தரவாதம் அளிக்கிறார்.
"சமுத்திரகனியிரிடம் மரியாதையுடன் கூடிய அன்பு வைத்திருக்கிறேன். சூரி அண்ணனுடன் சண்டை போட்டு சமாதானம் ஆகிற அளவுக்கு உரிமை உள்ளது. இந்தப் படத்துக்கான படப்பிடிப்புக்கு கிளம்பும்போதே எனக்கும் அவருக்கும் சண்டை. அடுத்த பத்து நாள்களுக்கு இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
"பிறகு சூரி அண்ணன் மனைவியும் என் மனைவியும் தொலைபேசி வழி இடைவிடாமல் தொடர்பு கொண்டு பேசிய பிறகுதான் இருவரும் சமாதானமாகி பேசத் தொடங்கினோம். 'இவரைப் போல் வாழ வேண்டும்' என நான் நினைக்கும் ஒரே மனிதர் என்றால் அது நடிகர் சசிகுமார். திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நேர்மையான, பாசமான மனிதர்.
'கத்தியால் குத்திவிட்டு 'மன்னிப்பு' கேட்டால்கூட, 'சரி விடுங்க' என்று சொல்லும் வெள்ளந்தி மனிதர். படப்பிடிப்பு முடிந்ததும் மிகுந்த மனநிறைவுடன் இருப்பதாகக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார். மேலும், ஒரு தங்கச் சங்கிலியும் அணிவித்தார்.
'நான் வேண்டாம் என்று மறுத்தபோது, 'உங்களை நம்பிப் பத்துப் படம்கூட தயாரிக்கலாம்' என்று தட்டிக்கொடுத்தபோது, உண்மையாகவே கண்கலங்கிவிட்டேன். இவை எல்லாம்தான் நம் உழைப்புக்கு கிடைக்கும் உண்மையான வரவேற்பு," என்கிறார் இரா. சரவணன்.

