ஆதரவற்றோரை மகிழ்வித்த நிதி
கொரோனா நெருக்கடி வேளையில் திரையுலகத்தினர் தங்களால் இயன்ற உதவிகளைப் பிறர்க்குச் செய்து வருகின்றனர். அந்த வகையில் தமது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் கொண்டாடி உள்ளார் இளம் நாயகி நிதி அகர்வால்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி இவரது பிறந்தநாள். ஒவ்வோர் ஆண்டும் இதை குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்வாராம். ஆனால் நடப்பாண்டு அதை தவிர்த்துவிட்டார்.
மாறாக, தமது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள முதியோர்களுடனும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடனும் நேரத்தைச் செலவிட்டு, அனைவரையும் உற்சாகப்படுத்தி உள்ளார்.
"ஆதரவற்றோரை அனைவரும் அரவணைக்க வேண்டும். அந்த இல்லத்தில் இருந்த முதியவர்களுடன் கைகுலுக்கிப் பேசியபோது பலர் நெகிழ்ந்து போயினர். என் கையால் உணவு பரிமாறியபோது பெரும் மனநிறைவு ஏற்பட்டது," என்கிறார் நிதி.
ஜெயம் ரவியின் 'பூமி', சிம்புவின் 'ஈஸ்வரன்' ஆகிய படங்களின் மூலம் இளையர்களைக் கவர்ந்த நிதி அகர்வால், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
அபர்ணாவின் கனவு நிறைவேறியது
தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பது தமது கனவாக இருந்தது என்றும் அது இப்போது 'பீஸ்ட்' படத்தின் மூலம் நிறைவேறி உள்ளதாகவும் சொல்கிறார் அபர்ணா தாஸ்.
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தை ஒதுக்கி உள்ளாராம் இயக்குநர் நெல்சன்.
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாதவர் அபர்ணா. எம்பிஏ பட்டதாரியான இவர் 'டிக்டாக்' செயலியில் ஏராளமான காணொளிப் பதிவுகளை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர்.
இதையடுத்து மலையாளத்தில் 'அந்திக்காடு' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 'மனோகரம்' என்ற மலையாளப் படத்தில் கதாநாயகியானார். இப்போது தமிழ்ப் படத்திலும் அறிமுகமாகி உள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சியில் அர்ஜுன்
நடிகர்கள் கமல், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரைத் தொடர்ந்து அர்ஜுனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள 'சர்வைவர்' நிகழ்ச்சியின் தமிழ்ப் பதிப்பை அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார். இந்தப் போட்டிக்கான விதிமுறையின்படி, நூறு பங்கேற்பாளர்கள் ஆள் அரவமற்ற தீவு ஒன்றில் நூறு நாள்கள் தங்கியிருக்க வேண்டும். நூறாவது நாள் வரை தாக்குப் பிடிப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். "இது பங்கேற்பாளருக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும்," என்கிறார் அர்ஜுன்.

