'கொற்றவை'- பெரும் புதையலைத் தேடி ஒரு நெடும்பயணம்

3 mins read
3bb004aa-bf6d-4190-b9d6-e641c8fa4069
'கொற்றவை' படத்தின் ஒரு காட்சியில் சந்தனா. -

குறைந்த செலவில் படம் எடுக்கும் புத்திசாலி என்றுதான் தயாரிப்பாளர் சி.வி.குமாரை கோடம்பாக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். இவர் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் பலர் இன்று முன்னணி படைப்பாளிகளாக வலம் வருகிறார்கள்.

சி.வி.குமாரும் படங்கள் இயக்கி உள்ளார். 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகியவை இவரது இயக்கத்தில் உருவானவைதான். இப்போது 'கொற்றவை' எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இது மூன்று பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் வெளியீடு காண தயாராக உள்ளதாம்.

"முன்பு 'மாயவன்' படத்தை இயக்கி முடித்ததுமே `கொற்றவை' படத்துக்கான கதையை நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி வந்தேன். இரண்டு கதைகள் தயாராக இருந்த நிலையில், எதை முதலில் படமாக்கலாம் என்ற குழப்பம் ஏற்பட்டது. எனது உதவி இயக்குநர்களிடம் கலந்தாலோசித்தபோது, எல்லோருமே 'கொற்றவை'யைத்தான் தேர்வு செய்தனர்.

"கொரோனா காலகட்டத்தில் இப்படியொரு கதையைச் சொன்னால் ரசிகர்கள் கவனிப்பார்களா, அல்லது நகைச்சுவையான கதையை கையாள்வோமா என்றெல்லாம் மனதில் பலவிதமான யோசனைகள். ஒரு கட்டத்தில் தைரியமாக களமிறங்குவோம். வெற்றியோ தோல் வியோ ஏதாவது ஓர் அனுபவம் கிடைக்கும் என்று முடிவெடுத்தேன்.

"எதற்காக மூன்று பாகங்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? இந்தக் கதையில் அவ்வளவு விஷயங்கள் உள்ளன. அவை அனைத் தையும் ஒரே படத்தில் அடக்கிவிட இயலாது. முதல் பாகம் முடிந்ததும் திரையிட்டுப் பார்த்தோம். எனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உருவாகி உள்ளது, நினைத்ததைச் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது," என்கிறார் சி.வி.குமார்.

'கொற்றவை' சரித்திரப்படமா? என்றால் அப்படிச் சொல்ல முடியாது என்றும் சொல்கிறார்.

"ஒட்டுமொத்தமாக அப்படி முத்திரை குத்திவிட இயலாது. இது உண்மையும் கற்பனையும் கலந்த கதை. மூன்று காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும். 13ஆம் நூற்றாண்டில் ஒரு புதையலைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். அதில் தோல்வியே மிஞ்சுகிறது. அதன் பிறகு சமகாலத்தில் அதற்கான முயற்சி நடக்கும். அப்படியென்ன புதையல், ஏன் அதைக் கண்டெடுக்கும் முயற்சி நடக்கிறது என்பதை வரலாற்றுச் சம்பவங்களுடன் கற்பனையையும் கலந்து சொல்லி இருக்கிறோம்.

"ஒரு புதையலைக் கண்டுபிடிப்பதற்கான நீண்ட, பெரும் முயற்சி என்றும் சொல்லலாம். வரலாற்றுச் சம்பவங்களைப் பொறுத்தவரையில் இரண்டாம் பாகத்தில்தான் அதிகமாக இருக்கும். அந்தப் புதையலுக்கான துருப்புச்சீட்டு 'கொற்றவை' எனும் தமிழ்க் கடவுள். தமிழர்கள் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் படமாக இது இருக்கும்," என்று சொல்லும் சி.வி.குமார், இதில் பெரும்பாலும் புதுமுகங்களைத்தான் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பயன்படுத்தி உள்ளார்.

"புதுமுகம் ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் இரண்டு படங்கள் நடித்துள்ள சந்தனாவுக்கு இந்தப் படம் நல்ல பெயரைக் கொடுக்கும். சுபிக்‌ஷா, அனுபமா குமார், வேல ராமமூர்த்தி, வேலு பிரபாகரன், பவன் ஆகியோரும் உள்ளனர்.

"தமிழ்மகன் வசனம் எழுதி உள்ளார். இசை ஜிப்ரான். '96' ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரத்தின் உதவியாளர் பிரகாஷ் ஒளிப்பதிவுக்குப் பொறுப்பேற்க, படம் நல்லவிதமாக உருவாகி உள்ளது.

"எனது படங்களில் ஏன் பெரிய நடிகர்கள் நடிப்பதில்லை என்று கேட்கப்படுகிறது. என்னுடைய படம் கதையோட்டத்துடன் இருக்கக்கூடியது. வீண் பிரம்மாண்டம் தேவைப்படாது. அதனால்தான் பெரிய நடிகர்களும் தேவைப்படவில்லை," என்கிறார் சி.வி.குமார்.