'நன்றியே மிக இனிய சொல்'

'நன்றியே மிக இனிய சொல்'

3 mins read
5bd53995-7d19-448f-b7fb-5d26159f9d2f
-

வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, ஒருவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவிப்பது.

திரையுலகில் சிலர் இந்த நல்ல காரியத்தைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரது அனுபவத்தை தெரிந்து கொள்வோம்.

நன்றி என்பதைவிட இனிமையான சொல் இருக்க முடியாது என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

"என்னைப் பொறுத்தவரை நான் எல்லோருக்குமே நன்றிக்கடன்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். நான் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தையே 'நன்றி' என்பதுதான். எனக்கு அதுதான் மிக இனிய சொல். என் அம்மா எனக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் கூட மறக்காமல் நன்றி சொல்வேன்.

"நான் மட்டுமல்ல, எல்லாருமே அவரவர் வாழ்க்கையில் நடக்கும் அனைத்துக்கும் யாரேனும் ஒருவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம் என்பது என் கருத்து. குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவு, வசிக்கும் வீடு என பலவும் நமக்குக் கிடைக்க என்ன காரணம்? இதற்காக நன்றி சொல்வது நம் கடமை. "என்னுடைய நெருக்கமான நண்பர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். ஒட்டுமொத்த உலகத்துக்கே நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்று சொல்லலாம். என்னுடைய இந்த கருத்தை ஊடகங்களில் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நன்றி," என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

தனது வளர்ப்புத் தந்தைக்கு பல வகையிலும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் நடிகை ஷெரின்.

அவர் நிபந்தனையற்ற அன்பை தமக்குக் கொடுத்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

"என் வாழ்க்கையில நான் நன்றிக்கடன்பட்டிருக்கும் முதல் நபர் என் அம்மா. அவரைப் பற்றி ஊடகங்களிடம் நிறைய சொல்லி இருக்கிறேன். ஆனால் எனது வளர்ப்புத் தந்தை குறித்து பேசியதில்லை. நான் தந்தையின் அரவணைப்பு இன்றி வளர்ந்தவள். அப்பாவின் அன்பு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. அந்த அன்பை எனக்குக் குறையாமல் தந்தவர் அவர்.

"அம்மா சில சமயங்களில் என்னைக் கடிந்து கொள்ளும்போது எனக்கு ஆதரவாகப் பேசுவார். அம்மாவுக்குத் தெரியாமல் பரிசுகள் வாங்கித் தருவார். நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

"தவறுகள் செய்தால் அவற்றை அன்பாகப் பேசி புரிய வைப்பார். அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசி உள்ளேன். அதன் மூலம் பலவற்றைப் புரிந்துகொண்டுள்ளேன்," என்கிறார் ஷெரின்.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க தயங்குவதோ, காலம் தாழ்த்துவதோ கூடாது என்கிறார் 'ரஜினி முருகன்' படத்தின் இயக்குநர் பொன்ராம்.

தாம் நன்றிக்கடன் பட்டிருப்பவர்களிடம் உரிய நேரத்தில் நன்றி சொல்லிவிட்டதாகச் சொல்கிறார். எனினும் அமுதா அக்காவிடம் நன்றி சொல்ல முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் மட்டும் மனதை வாட்டுகிறதாம். சரி, யார் அந்த அமுதா அக்கா?

"திரைத்துறையில் வாய்ப்பு தேடி சொந்த ஊரான சமயநல்லூரில் இருந்து சென்னை புறப்பட்டேன். பேருந்தில் செல்வதற்குக் கூட கையில் போதுமான பணமில்லை. இருநூறு ரூபாய்தான் இருந்தது. மேலும் ஐம்பது ரூபாய் தேவைப்பட்டது.

"ஊரில் உள்ள உறவினர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்படுவோம். அப்படியே ஐம்பது ரூபாய் வாங்கிச் செல்வோம் என்று முடிவெடுத்து என்னுடைய பாட்டி, தாய்மாமா என்று பலரைச் சந்தித்து விடைபெற்றேன். ஆனால் ஒருவர் கூட ஏதாவது உதவியோ பணமோ தேவையா என்று விசாரிக்கவே இல்லை.

"அச்சமயம் வீட்டில் நிறைய கஷ்டங்கள். அதனால் சென்னை செல்வதற்கு என்னிடம் போதுமான பணம் இருக்காது என்பது தெரிந்தும் யாருக்கும் உதவி செய்யும் மனமில்லை. எனக்கு அழுகையாக வந்தது. அப்போதுதான் என் சித்தி மகள் அமுதா வசிப்பது நினைக்கு வந்தது. அவரும் கூட ஏழ்மையில் தான் இருந்தார்.

"அவர் வீட்டுக்குப் போனதுமே முதலில் சாப்பிடு என்று கூறிவிட்டார். வயிறு நிரம்ப சாப்பிட்ட பின்னர் அவரிடம் பேசத் தொடங்கியதுமே, 'உன் முகமே சரியில்லையே... ஏன் வாடிப் போயிருக்கு... கையில் காசு இருக்கிறதா என்று பாசமாக அவர் விசாரித்ததும் நொறுங்கிப்போய் அழுதேன். அவர் என் நிலைமையைப் புரிந்துகொண்டு, இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளைத் தந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

"அந்த நூறு ரூபாய், அமுதா அக்காவின் ஆசீர்வாதம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு சென்னையை வந்தடைந்து, இன்று வெற்றி இயக்குநராக உள்ளேன். பின்னர் ஒருநாள் அமுதா அக்காவுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோதுதான் அவர் ஒரு விபத்தில் பலியாகிவிட்ட தகவல் தெரிய வந்தது. அவருக்கு நன்றி தெரிவிக்க இயலாமல் போய்விட்டதே என்று இன்றுவரை மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது," என்கிறார் பொன்ராம்.

ஐஸ்வர்யா மேனன்