பிரக்யா: ராணுவத்தில் சேர விரும்பினேன்

பிரக்யா: ராணுவத்தில் சேர விரும்பினேன்

2 mins read

நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 91ஆவது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. எனினும், அதன் நாயகி பிரக்யா நாக்ரா குறித்து அறிந்து கொள்வதில் தமிழ் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பிரக்யா நாக்ரா பற்றிய அடிப்படை தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன.

ஜம்முவை சேர்ந்த இவரது தந்தை ராணுவ அதிகாரி. தாய்மொழி பஞ்சாபி. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தந்தை வெவ்வேறு ஊர்களுக்கு பணிமாற்றம் செய்யப்படுவாராம். அதனால் நாடு முழுவதும் சுற்றி வந்துள்ளார் பிரக்யா.

"இந்தப் பயணத்தின் மூலம் பல இடங்களைப் பார்க்கவும் பல்வேறு தரப்பு மக்களுடன் பழகவும் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் சென்னையில் சில காலம் வசித்தோம். அப்போதே என் மனம் கவர்ந்த நகரமாக சென்னை மாறிவிட்டது. மொத்த தமிழ்நாடும் பிடிக்கும்.

"சென்னைக்கு வந்த நேரம் நடிகையாகிவிட்டேன். அதிலும் நேரடித் தமிழ் படத்தில் ஒப்பந்தமானது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் பிரக்யா.

சினிமாவுக்குத்தான் இவர் புதுமுகம். அதற்கு முன்பு தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்த அனுபவம் இவருக்கு உண்டு.

சிறு வயது முதல் தானும் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் பிரக்யாவின் விருப்பமாக இருந்துள்ளது. ஆனால் காலம் வேறு கணக்கு போட்டிருந்ததால், சினிமா பக்கம் ஒதுங்கிவிட்டார். சினிமாவில் நடிக்க குடும்பத்தார் அவ்வளவு எளிதில் அனுமதி அளித்துவிடவில்லை. நிறைய கேள்விகள் எழுந்தனவாம்.

"ராணுவத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும். நம்மைவிட உயரதிகாரிகள் சொல்வதை செய்ய வேண்டியிருக்கும். அதாவது, யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலைமை நீண்ட நாள்களுக்கு நீடிக்கும். ஆனால் சினிமா துறையில் அப்படி இல்லை. இது படைப்புக்கான தளம். எனவே நிறைய சுதந்திரம் இருக்கிறது. நிறைய சாதிக்கவும் முடியும். ஆசைக்கு ஒருமுறை ராணுவ அதிகாரியாகவும் நடிப்பேன்.

"ராணுவத்தில் பணியாற்றுவது பெரிய விஷயம். அதற்கான தகுதி அனைவருக்கும் இருக்காது. அதை உணர்ந்துதான் ராணுவத்துக்கு மதிப்பு அளித்து ஒதுங்கிவிட்டேன்," என்றார் பிரக்யா.

அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான இவர்,

கல்லூரியில் படிக்கும்போதே விளம்

பரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

படிப்பை முடித்த உடனேயே நடிப்புதான் முழு நேரத் தொழில் என்று முடிவு செய்து, கடந்த மூன்று ஆண்டுகளாக அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்ப் பண்டிகைகள், கலை, கலாசாரம் என எல்லாமே தம்மை வெகுவாக ஈர்த்துள்ளதாகக் குறிப்பிடுபவர், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளார். நடிகைகள் ஜெனிலியா, அசின் ஆகிய இருவரும்தான் பிரக்யாவின் முன்மாதிரிகள். இருவரையும்போல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறாராம்.