"சினிமாவில் நடிப்பதை சிலர் சாதாரண விஷயமாகவும் சொகுசான வேலை என்றும் கருதுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு படத்துக்காகவும் எந்த அளவுக்கு கடுமையாக உழைக்கிறோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்," என்கிறார் ஆஷ்னா சவேரி.
சந்தானத்துடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி உள்ள இவர், இப்போது 'கன்னித்தீவு' படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா என மேலும் மூன்று நாயகிகள் உள்ளனர்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கடலோரக் கிராமப் பகுதியில் நடைபெற்றது. அங்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிக்காகவும் இந்த நான்கு நாயகிகளும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்ததாம். அந்த அனுபவங்களை அண்மைய பேட்டியில் விவரித்துள்ளார் ஆஷ்னா.
"கேரள கடற்பகுதியில் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கினர். படகில் அமர்ந்திருக்கும் நாங்கள் திடீரென தண்ணீரில் குதித்து எதிரிகளின் இடத்தை அடைவது போன்ற காட்சி அது. இயக்குநர் 'ஆக்ஷன்' என்று சொன்னதும் நால்வரும் குதித்துவிட்டோம். ஆனால் ஒரு 'டேக்'கிலேயே அக்காட்சியை படமாக்க முடியவில்லை.
"அதனால் மீண்டும் மீண்டும் தண்ணீரில் மூழ்கி எழுந்ததால் கடல் நீரை என்னையும் அறியாமல் குடித்துவிட்டேன். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் அவ்வப்போது சில மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது," என்கிறார் ஆஷ்னா.
அது மட்டுமல்ல, கடலில் உள்ள விஷத்தன்மை வாய்ந்த செடிகள், தாவரங்களுக்கு அருகே செல்ல வேண்டாம் என்றும் படக்குழுவினர் எச்சரித்து இருந்தனராம். இதனால் ஒவ்வொரு நிமிடமும் பயந்தபடியே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், சில சமயங்களில் கடலுக்கு மத்தியில் உள்ள சிறிய மரத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கியபோது உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டது என்கிறார்.
"ஒருமுறை அப்படி நடித்தபோது கால் மூட்டு பிசகிவிட்டது. வலியால் துடித்தேன். நல்ல வேளையாக அன்றைய தினம் அந்தக் காட்சியுடன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.
"இதேபோல் சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மற்றொரு சண்டைக்காட்சியைப் படமாக்கினர். நான்கு கதாநாயகிகளும் அதில் பங்கேற்றோம். இம்முறை உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்டது. அங்கும் இங்கும் பறந்து பறந்து சண்டையிட்டதில் எல்லோருமே சோர்ந்துவிட்டோம்.
"அப்போது என்னுடன் சண்டையிட்ட ஒரு சண்டைக் கலைஞரை தவறுதலாக முகத்தில் குத்திவிட்டேன். அவருக்கு கடும் வலி ஏற்பட்டிருக்கும். ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தார்.
"காட்சி படமாக்கப்பட்டதும் அவரிடம் மன்னிப்பு கோரினேன். அவர் 'பரவாயில்லை' என்று சொல்லிவிட்டாலும், இப்போதும்கூட அவருக்காக என் மனம் வருந்துகிறது," என்கிறார் ஆஷ்னா.
ஒரு சண்டைக்காட்சியில் ஆஷ்னா வேகமாக ஓடி வந்து பெரிய கண்ணாடித் தடுப்பு ஒன்றில் மோதுவது போல் நடிக்க வேண்டியிருந்ததாம். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அதில் தைரியமாக நடித்தாராம்.
"சண்டைப் பயிற்சியாளர் சொல்லிக் கொடுத்தபடி சரியான நேரத்தில் கண்ணாடியில் மோத வேண்டும்.
"இல்லைஎன்றால் பலத்த காயம் ஏற்படும். இதை முன்கூட்டியே என்னிடம் விவரித்துவிட்டனர். காட்சி படமாக்கப்பட்டபோது நான் நேரம் தவறாமல் கச்சிதமாக நடித்தேன்.
"ஆனால், அந்த பெரிய கண்ணாடி தடுப்பு உடைந்து நொறுங்கியபோது அதன் துண்டுகள் பறந்தன.
"என் மீது அவை பட்டுவிடாமல் இருக்க கையை உயர்த்தி தடுத்தபோது, அவை என் உள்ளங்கைகளைப் பதம்பார்த்தன. இப்படி ரத்தம் சிந்தி இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன்.
"படம் வெற்றி பெற்றால் இந்த உழைப்பு வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி ஏற்படும்," என்கிறார் ஆஷ்னா சவேரி.
தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தும் இவர், சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை என நல்ல பெயர் வாங்கி உள்ளார்.
ஆஷ்னா சவேரி
, :

