கேக் வெட்டி கொண்டாடிய சமந்தா
மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பில் இருந்த போதுதான் அவருக்கு இந்தத் தகவல் கிடைத்ததாம்.
உடனே படப்பிடிப்பில் உடன் இருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகிய மூவரிடமும் இத்தகவலைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சமந்தா.
இந்நிலையில் அவருக்குத் தெரியாமல் ஒரு கேக்கை வாங்கி வந்து அவரை வெட்டச் சொல்லி படக்குழுவினரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த திடீர் ஏற்பாடு தம்மை நெகிழ வைத்ததாகவும் இந்த அன்பு தன்னை மகிழ்ச்சி அடைய வைத்ததாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.
கவுண்டமணியைச் சந்தித்த சிவா
நடிகர் கவுண்டமணியை அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், "இது மகிழ்ச்சியான, சிறப்பான தருணம். இது என்றென்றும் நினைவுகூரத்தக்க நாள்," என்று தமது பதிவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள் ளார். கவுண்டமணி கடைசியாக நடித்த படம் 'வாய்மை'. அதன் பிறகு நடிப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் தன் மனதுக்குப் பிடித்தமான ஒரு கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம். நடிகர் சிவகார்த்திகேயன் அவரை எதற்காக சந்தித்தார் என்று குறிப்பிடவில்லை. ஒருவேளை தனது படத்தில் நடிக்குமாறு சிவா கோரிக்கை விடுத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

