கடற்படை வீரராகப் பணியாற்றி வந்தவர் இப்போது திரைப்பட இயக்குநராகி உள்ளார். பெயர் ப்ராஷ்.
ரகுமான் நாயகனாக நடிக்க, 'ஆபரேஷன் அரபைமா' என்ற தலைப்பில் இவர் இயக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இது கடற்படை அதிகாரி ஒருவரின் சாகசங்களை விவரிக்கும் வகையில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. 'நாடோடிகள்' படத்தில் நடித்த அபிநயாதான் கதாநாயகி. தமிழ், மலையாளம் என இரு மொணிகளில் வெளியாகிறது.
அதென்ன 'ஆபரேஷன் அரபைமா'?
"நல்ல நீரில் வாழும் மீன் வகைகளில் ஒன்று அரபைமா. பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருக்கும். தவிர, மனிதர்களிடம் கூட ஒரு குழந்தையைப் போல் பழகும். அதே சமயம் அதற்கு எதிராக நாம் ஏதாவது செய்கிறோம் எனத் தெரிந்தால் நம்மை துவம்சம் செய்துவிடும்.
"ரகுமான் இந்த அரபைமா மீன் போன்ற கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறார். கடற்படை அதிகாரி சிவா கிருஷ்ணமூர்த்தியாக சிறப்பாக நடித்துள்ளார். மேலும் கடலில் நடக்கும் போராட்டம் என்பதால் இதற்கு 'ஆபரேஷன் அரபைமா' என்று தலைப்பு வைத்துள்ளோம்.
"இது நம் நாடும் நம் நாட்டுடன் நட்பாக இருக்கும் சில நாடுகளும் இணைந்து செயல்படுவது போன்ற கதை. கடல் வழியாக நடக்கும் பெண் கடத்தல், போதைப்பொருள் கடத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
"அதற்குதான் 'ஆபரேஷன் அரபைமா' என்று பெயர். இது தொடர்பாக சில அடிப்படை விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக ஒரு கதையை உருவாக்கி உள்ளோம். தமிழில் இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் குறைவு. அவற்றுள் தனித்துவம் வாய்ந்த படைப்பாக இது இருக்கும்," என்கிறார் இயக்குநர் ப்ராஷ்.
பெரும் பகுதி கதை கடற்பகுதிகளில்தான் படமாக்கப்பட்டுள்ளதாம். தமிழகம், கேரளா, அந்தமான், கோவா, துபாய் என பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்குமாம்.
அபிநயா குறித்து?
"அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. அபிநயாவின் திறமை குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தனக்கான கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை நிறைவாகச் செய்துள்ளார். அவர் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினாலும் மனதில் பதியும். காரணம், ஒவ்வொரு காட்சியையும் நன்கு உள்வாங்கி அதை தன் நடிப்பில் வெளிப்படுத்துகிறார்," என்று சொல்லும் ப்ராஷ், அந்தமான் கடற்பகுதியில் நடந்த படப்பிடிப்பு மறக்க முடியாதது என்கிறார்.
அந்தக் காட்சிகள் உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேரள காவல்துறையின் கமாண்டோ படையின் உதவியைக் கேட்டுப் பெற்றாராம். அந்தப் படையின் துணை கண்காணிப்பாளர் அஜித், பயிற்சியாளரான கேப்டன் அனில்குமார் இருவரையும் துணைக்கு வைத்துக்கொண்டுதான் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
"அவை அனைத்துமே படத்துக்கு முதுகெலும்பு போன்றவை. அதனால் கடுமையாக உழைத்தோம். அந்த உழைப்பு வீண் போகாத வகையில் ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக அமைந்துள்ளது.
நாயகன் ரகுமான் குறித்து?
"என்னுடைய முதல் படம் நிச்சயமாக ராணுவம், அதனுடன் தொடர்புடைய கதைக்களமாக இருக்க வேண்டும் என்பதை எப்போதோ முடிவு செய்துவிட்டேன். அதற்கேற்ற கதையையும் தயார் செய்து வைத்திருந்தேன். வாய்ப்பு கிடைத்தால் அர்ஜுன் அல்லது ரகுமான் ஆகிய இருவரில் ஒருவர்தான் கதை நாயகன் என்பதும் எனது முடிவாக இருந்தது.
"நடன இயக்குநர் கலா, பிருந்தா மூலமாக ரகுமான் அறிமுகமானார். கதையைக் கேட்டதும் தமக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றார் ரகுமான். அவருக்கு என்னைவிட திரையுலகில் மிகுந்த அனுபவம் உண்டு. அதனால் நான் எதிர்பார்த்ததைவிட மிக கச்சிதமான நடிப்பை வழங்கி உள்ளார். இது கடற்படையின் வீரத்தை பறை சாற்றும் படமாக இருக்கும்," என்று சொல்லும் ப்ராஷ், கடற்படை வீரராக பணியாற்றிய பின்னர் விமானத்துறையிலும் வேலை பார்த்துள்ளார்.
விமானப் பராமரிப்பு பொறியியலாளர் பயிற்சியை மேற்கொண்ட பின்னர் விமானியாகவும் செயல்பட்டாராம். சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பான பணியை செய்துள்ளார். எனினும், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவரது கனவாக இருந்துள்ளது. அதற்கேற்ப இயக்குநர் மேஜர் ரவியின் 'அரண்' தமிழ் படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது ப்ராஷும் இயக்குநராகி விட்டார்.

