அரசியல் வேண்டாம் என முடிவெடுத்த பிறகு ரஜினியின் அடுத்தடுத்த நகர்வுகளை அவர் முடிவு செய்வதற்கு முன்பே சிலர் அறிவித்துவிடுகிறார்கள். இது அவருக்கு வருத்தம் அளித்த போதும், திரையுலகில் இதுபோன்ற விஷயங்கள் வழக்கமானவைதான் என மௌனம் காத்துவிடுகிறார்.
இந்நிலையில், அவர் திடீர் பயணமாக இமயமலை சென்றிருப்பதாகவும் அங்கு மேற்கொள்ளும் தியானத்தின்போது அவர் சில முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்தது.
எனினும், இவை உண்மையான தகவல்கள் அல்ல என ரஜினி தரப்பில் கூறப்படுகிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இமயமலை பயணத்தை மேற்கொள்ள ரஜினி விரும்பவில்லையாம்.
"ஒரு படத்தில் நடித்து முடித்ததும் இமயமலைக்குச் செல்வது ரஜினியின் வழக்கம். அங்கு தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுவார்.
"இதன் மூலம் கிடைக்கும் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அடுத்த படத்துக்கான பணிகள் முடியும் வரை நீடிப்பதாக நெருக்கமானவர்களிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் லக்னோவில் 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ரஜினி தனக்குரிய பணிகளை முடித்துவிட்டதால் அங்கு செல்லவில்லை.
அதற்குப் பதிலாக பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்குத் தனியாகச் சென்றிருக்கிறார் ரஜினி. அந்த வீட்டில் வேறு யாரும் இல்லையாம். இன்னும் சில நாட்கள் அங்கே தியானத்தில் இருந்துவிட்டு சென்னை திரும்ப இருக்கிறாராம் ரஜினி," என்று முன்னணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இயக்குநர் தேசிங்கு பெரியா சாமியின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் ரஜினியை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம். எனவே அடுத்து அவரது இயக்கத்தில் நடிப்பது என அவர் முடிவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தனக்காக உருவாக்கி உள்ள கதையும் அதற்கான களமும்கூட ரஜினிக்கு மனநிறைவு தந்திருப்பதாகத் தகவல்.
அந்த கதையில் இடம்பெற்றுள்ள கடந்தகால சம்பவங்களைக் கொண்ட பகுதி (ஃபிளாஷ்பேக்) சுமார் அரைமணி நேரம் திரையில் ஒடுமாம். அதற்கு மட்டுமே நூறு கோடி ரூபாய் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாம். எனவே பெரிய தயாரிப்பு நிறுவனத்தால்தான் இந்தப் படத்தை தயாரிக்க இயலும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
சில தயாரிப்பாளர்களிடம் மேலோட்டமாக பேசியபோது, சிறிய பகுதிக்காக நூறு கோடி ரூபாய் செலவிட தயக்கம் காட்டி உள்ளனர். எனவே, ஃபிளாஷ்பேக் பகுதியின் நீளத்தை பாதியாகக் குறைக்கும்படி ரஜினி கூற, அதற்கான கதை ஆலோசனையை தனது குழுவினருடன் தேசிங்கு ராஜா நடத்தி வருவதாகத் தெரிகிறது.
பெங்களூரு பயணத்தின்போது தியானம் செய்யும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள ரஜினி, சென்னை திரும்பு வதற்குள் சில முக்கிய முடிவுகளை அறிவி்க்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
, :

