யோகி பாபு நடித்து வரும் புதுப்படத்தின் தலைப்பை மாற்றும்படி சந்தன வீரப்பனின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வீரப்பன் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்பதே அவர்களுடைய கோரிக்கை. அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் இப்படத்துக்கு 'வீரப்பனின் கஜானா' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
"காடுகளின் முக்கியத்துவத்தையும் அதனால் மனித குலம் அடையும் நன்மைகளையும் விவரிக்கும் கதை இது. அதனால் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
"யோகி பாபு தனக்கே உரிய பாணியில் பல முக்கியமான கருத்துகளை நகைச்சுவையாக விவரிப்பார். பல்வேறு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, படம் பார்ப்பவர்களை அவ்வப்போது திகைக்க வைக்கும்.
"முதன்முறையாக இதில் 'யூடியூப்' சேனலை நடத்தும் இளையராக நடிக்கிறார் யோகி பாபு. 'வீரப்பனின் கஜானா' என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தாலும் கதைக்கும் சந்தன வீரப்பனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
"வீரப்பன் மீதான வழக்குகள் குறித்தோ, காவல்துறையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியோ நாங்கள் எதையும் அலசவில்லை," என்கிறார் இயக்குநர் யாசின்.
இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்து அறிந்த வீரப்பன் குடும்பத்தார், இப்படக்குழுவினரைத் தொடர்பு கொண்டுள்ளனர். வீரப்பனின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய தலைப்பை யோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


