சிம்பு நடிக்கும் புதுப்படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவதில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் அறிவித்தது.
இதனால் சிம்பு தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. சில தயாரிப்பாளர்கள் அளித்த புகார்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல், தனது மகனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது என்றும் இதுகுறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் முறையிடப் போவதாகவும் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அண்மையில் கூறி இருந்தார்.
இந்நிலையில் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சிம்பு தகுந்த ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை வைத்து தாம் தயாரித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை உரிய நேரத்தில் முடிக்க இயலாமல் போனதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார். இதனால் தமக்கு சுமார் இருபது கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு.
இதேபோல் தேனாண்டாள் பிலிம்ஸ், திருப்பதி பிரதர்ஸ் உட்பட சில நிறுவனங்கள் சிம்பு மீது புகார் அளிக்கவே, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், அவை அனைத்துக்கும் தீர்வு காணுமாறு சிம்புவைக் கேட்டுக்கொண்டது. ஆனால், இதற்கும் சிலம்பரசன் ஒத்துழைக்கவில்லை என அடுத்தக்கட்ட புகார்களும் எழுந்தன.
இதனால் சிம்பு நடிக்கும் புதுப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம் தடைவிதிப்பதாக அறிவித்தது. இதனால் கவுதம் மேனன் இயக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பை துவங்க முடியவில்லை.
இதையடுத்து புகார் தெரிவித்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிம்பு தரப்பு முன்வந்தது. நேற்று முன்தினம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது சிம்புவுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சிம்பு தொடர்பான சில பணப் பரிமாற்றங்களுக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாகத் தெரிகிறது. அதன் காரணமாக சிம்புவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தயாரிப்பாளர் மைக் கேல் ராயப்பன் உடனான பிரச்சி னைக்கு மட்டும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்கு அதையும் பேசித் தீர்க்க முடியும் என சிம்பு தரப்பு உறுதி அளித்துள்ளது.
"இந்த பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்தால்தான் சிம்புவால் மீண்டும் தரமான படங்களில் கவனம் செலுத்த முடியும் என நினைத்தோம். இப்போது அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் பழைய சிம்புவை திரையில் காண முடியும்," என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

