வித்தியாசமான கதைக்களங்கள் அமைந்தால் தமிழ் இயக்குநர்களின் பார்வை விஜய் சேதுபதி பக்கம்தான் முதலில் திரும்புகிறது. அந்த வகையில் அறிமுக இயக்குநர் தீபக் தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார். நாயகியாக டாப்சி நடித்திருக்கிறார் என்பது மற்றோர் ஆச்சரியத் தகவல்.
படத்தின் தலைப்பு 'அனபெல் சேதுபதி'. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான கதையை தான் சொல்லப் போகிறார்களாம்.
'வைதேகி காத்திருந்தாள்', 'மெல்லத்திறந்தது கதவு', 'அம்மன்கோவில் கிழக்காலே' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த அந்நாள் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் வாரிசுதான் தீபக். ஆனால் தந்தையிடம் தொழில் கற்கவில்லை. இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம்தான் உதவி இயக்குநராகப் பணியாற்றி நல்ல அனுபவங்களையும் நுணுக்கங்களையும் கற்றதாகச் சொல்கிறார் தீபக்.
சரி... சேதுபதி கால்ஷீட் கிடைத்தது எப்படி?
"படத்தின் தலைப்பைக் கேட்டதும் திகில் படமாக இருக்குமோ என்று யோசிக்கத் தோன்றும். ஆனால் இது அப்படிப்பட்ட படம் அல்ல. அனுஷ்கா நடித்த 'அருந்ததி' படத்தில் கடந்து போன ஜென்மத்தில் நடக்கும் சம்பவங்களைக் காட்டி இருப்பார்கள். அதுபோல் இதிலும் ஓரு பகுதி இடம்பெறுகிறது. 1948ஆம் ஆண்டு இந்த 'ஃபிளாஷ்பேக்' பகுதியில் சேதுபதி அண்ணன் மன்னர் வேடத்தில் நடித்துள்ளார்.
"பட வேலைகளைத் தொடங்கும் முன்பே இது குழந்தைகளும் அமர்ந்து பார்க்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டோம். அப்படித்தான் படம் உருவாகி உள்ளது," என்கிறார் தீபக்.
முழுப் படத்தையும் வட இந்திய நகரமான ஜெய்ப்பூரில்தான் படமாக்கினோம். தயாரிப்பாளர் சுதனிடம் கதையைச் சொன்னபோது உடனடியாக முன்பணத்தைக் கொடுத்து, பட வேலைகளை தொடங்குமாறு கூறிவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. பிறகு யோகி பாபுவிடம்தான் கதையை முழுமையாகச் சொன்னேன். அதன் பிறகு சேதுபதி அண்ணன், டாப்சி என்று ஒவ்வொருவரிடமும் கதை சொன்னபோது என் னையும் அறியாமல் அது மேலும் மெருகேறியது.
"உண்மையாகவே சேதுபதி, டாப்சி என முன்னணியில் உள்ள கலைஞர்களை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். டாப்சி மூன்று முறை கதை கேட்டிருப்பார். அவருக்கு இதில் நகைச்சுவை தூக்கலாக உள்ள கதாபாத்திரம். அவரும் யோகி பாபுவும் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் சிரிக்க வைக்கும் என்பதற்கு இப்போதே உத்தரவாதம் தர முடியும்.
"இன்று இந்தியாவே உற்றுக் கவனிக்கும் ஒரு நடிகையாக வளர்ந்துள்ளார் டாப்சி. அவருக்குத் தமிழில் பேசவராது. ஆனால் நாம் பேசுவதை புரிந்துகொள்வார். எந்த மொழியாக இருந்தாலும் சவாலான கதைக்களங்களாகத் தேர்வு செய்து நடிக்கும் அவரும்கூட, 'சேதுபதியுடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்' என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுதான் சேதுபதி அண்ணனின் பலம்.
"அண்ணனைப் போல் நட்புடன் பழகக்கூடியவர்களைப் பார்ப்பது அரிது. வெளிப்படையாகப் பேசக் கூடியவர். படப்பிடிப்பு தளத்துக்குள் அவர் நுழைந்தாலே அங்குள்ள அனைவருக்கும் உற்சாகம் வந்துவிடும். அனைவருக்கும் ஒரு வணக்கம் சொல்லி அந்த நாளை இனிதாக்குவார்.
"அவருக்கு இந்தக் கதையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. நடிகராக மட்டுமல்லாமல், 15 நாள்கள் என்னோடு அமர்ந்து முழுக் கதையையும் செதுக்கிக் கொடுத்தார். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்கூட திடீரென தொடர்பு கொண்டு பேசுவார். 'நேற்று ஓரு காட்சி பற்றி பேசினோமே... அதை இப்படிச் செய்தால் என்ன' என்று புது யோசனை கூறுவார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருந்தார்.
"அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்," என்று சொல்லும் தீபக், இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் 'தாண்டவம்', 'சைவம்', 'தலைவா' ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். குருவிடம் கற்றுக்கொண்ட நுணுக்கங்கள்தான், தனித்து படம் இயக்கும் துணிச்சலைத் தந்துள்ளதாகச் சொல்கிறார்.
'அனபெல் சேதுபதி'யில் ராதிகா, ஜெகபதிபாபு, வெண்ணிலா கிஷோர், சேத்தன், தேவதர்ஷினி, சுரேகாவாணி, சுப்பு பஞ்சு, மதுமிதா, சுரேஷ்மேனன் ஆகியோரும் உள்ளனர். அனைவரையும் ஒருசேர இயக்கியதை நினைத்துப் பார்த்தால் தமக்கே ஆச்சரியமாக உள்ளது என்கிறார் தீபக். இப்படத்தின் முன்னோட்ட காட்சித்தொகுப்பு விரைவில் வெளியாகிறது. அதைப் பார்த்தால் படத்தின் கதை, கதாபாத்திரங்களின் தன்மை புரியுமாம். கிஷோர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
, :
டாப்சி

