ராஷ்மிகாவுக்கு பதிலாக அஞ்சலி
சங்கர் தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அஞ்சலி ஒப்பந்தமாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத் தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமானதாகக் கூறப்பட்டது.
எனினும் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் கால்ஷீட் ஒதுக்குவது தொடர்பில் சில நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விவரம் அறிந்த சங்கர் உடனடியாக ராஷ்மிகாவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தும்படி கூறிவிட்டார். அதன்பிறகே அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்தப் படத்தில் கொரிய பாடகி சூஷி பே என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதன்மைக் கதாநாயகியாக நடிக்க அலியாபட், கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். கடைசியில் இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் கியாராவை தேர்வு செய்துள்ளார் சங்கர்.
குளத்தை சீரமைக்கும் நடிகர் கார்த்தி
இடைவிடாத படப்பிடிப்பு, சினிமா சார்ந்த பணிகளுக்கு மத்தியில் நடிகர் சிவகுமாரின் வாரிசுகளான சூர்யாவும் கார்த்தியும் சமூக சேவைகளில் ஈடுபடவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகின்றனர்.
தற்போது ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் கார்த்தி. நேற்று காலை முதல் அந்தப் பணி நடைப்பெற்று வருகிறது.
இத்தகைய பணிகளுக்காகவே 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் கார்த்தி. அதன் மூலம் பல்வேறு கிராமங்களில் பல நல்ல காரியங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக விவசாயம் சார்ந்து அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் என்ற பகுதியில் உள்ள சூரவள்ளி கால்வாயை உழவன் அமைப்பு சுத்தப்படுத்தி இருந்தது.

