சந்தானத்துடன் இணைந்து நடிக்க இளம் நாயகிகள் பலர் தயங்குவது தமக்கு வருத்தம் அளிப்பதாக இயக்குநர் கார்த்திக் யோகி கூறுகிறார். சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள 'டிக்கிலோனா' படத்தின் இயக்குநர் இவர்தான்.
இந்தப் படத்துக்கான கதையை எழுதும்போது சந்தானம்தான் தன் நினைவுக்கு வந்ததாகச் சொல்பவர், அவரது உழைப்பு தம்மை பிரமிக்க வைத்ததாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"என் நண்பர் ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கொண்டு இந்தப் படத்தின் கதையை உருவாக்கினேன். ஒருநாள் நண்பர்கள் பலர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கால இயந்திரம் ஒன்று கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை எழுப்பி விவாதம் நடத்தினோம். அப்போது ஒரு நண்பர், 'அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால், எனக்கு நடந்த திருமணத்தை நிறுத்திவிடுவேன்' என்றார். அதை அடிப்படையாக வைத்துதான் 'டிக்கிலோனா' படத்துக்கான கதைக்களத்தை அமைத்தேன்.
"பல ஆண்டுகளுக்கு முன் வெளியான, 'ஜென்டில்மேன்' படத்தில் 'டிக்கிலோனா' எனும் வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதில் இடம்பெற்ற ஒரு காட்சியில், செந்தில் சார் 'டிக்கிலோனா டிக்கிலோனா' என்று தலைகுனிந்தபடி சொல்லிக் கொண்டே பின்னோக்கி வருவார். அப்போது கவுண்டமணி அவரை எட்டி உதைப்பார்.
"எனது கதையும் கால இயந்திரத்தின் உதவியோடு பின்னோக்கிச் செல்கிறது என்பதால் இந்த தலைப்பை தேர்வு செய்தோம். இதைக் கேட்ட அனைவருமே பொருத்தமான தலைப்பு என்று பாராட்டுகிறார்கள்," என்கிறார் கார்த்திக் யோகி.
இதில் சந்தானம் மூன்று விதமான தோற்றங்களில் வருவதுடன் மாறுபட்ட நடிப்பிலும் அசத்தி உள்ளதாகச் சொல்லும் படக்குழுவினர், தினமும் தமது சிகையலங்காரத்தையும் உடைகளையும் குறைந்தபட்சம் இருபது முறை மாற்றியபோதும் சந்தானம் சலிப்படையவில்லை என்கிறார்.
"இந்தப் படத்துக்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுக்கால போராட்டம் இது.
"ஆனால் இந்தப் போராட்டத்தைவிட, எனது படத்துக்கு கதாநாயகியை தேடிப்பிடிப்பதற்குத்தான் அதிகம் அலைந்து திரிந்தேன் என்று சொல்லலாம். இருபத்து ஐந்து நாயகிகளையேனும் சந்தித்து இருப்பேன். ஆனால் ஒருவர்கூட என் படத்தில் நடிக்க முன்வரவில்லை.
"ஒருசிலர் சந்தானம்தான் கதாநாயகன் என்று சொன்னதும் கதை பிடித்திருந்த போதும் நடிக்கத் தயங்கினர்.
"நகைச்சுவை நடிகர் என்று பெயரெடுத்த சந்தானம், அந்தப் பிம்பத்தை உடைத்தெறிந்துவிட்டு நாயகனாக நடிக்கத் தொடங்கி உள்ளார். இதற்காக அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.
"அவர் எவ்வளவு புகழுடனும் வாய்ப்புகளுடனும் வலம் வந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் எடுத்துள்ள இந்த முடிவால் எவ்வளவு இழந்து இருப்பார் என்பது எனக்குத் தெரியும். லட்சணக்கணக்கில் சம்பளம் பெற்ற ஒருவர் அதையெல்லாம் உதறிவிட்டு, நாயகனாக நடிப்பது பெரிய விஷயம்," என்கிறார் கார்த்திக் யோகி.

