'என்னங்க சார் உங்க சட்டம்' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகும் புதுப்படத்தை இயக்குகிறார் பிரபு ஜெயராம்.
நாயகனாக ஆர்.எஸ்.கார்த்திக் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 'பீச்சாங்கை' என்ற படத்தில் நடித்தவர். இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.
"அண்மையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இந்தப்படமும் இதே கதைக்கருவுடன் தான் உருவாகிஉள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே நாங்கள் படத்தை முடித்துவிட்டோம். அது மட்டுமல்ல, படம் தணிக்கை ('யு/ஏ') சான்றிதழையும் பெற்றுவிட்டது.
"இப்படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் இருக்கும். காதல், நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருக்கும். இடைவேளைக்குப் பிறகு சாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளை விரிவாகச் சொல்லியபடி கதை நகரும். பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். படம் விரைவில் வெளியாகும்," என்கிறார் இயக்குநர் பிரபு ஜெயராம்.

