தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயக்குநர் வெங்கட் பிரபுவின் புதிய ஓடிடி தளம்

2 mins read
eb394225-ce0a-4c37-acdf-51bb2060d79e
-

தனிநபர் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை நிறைவுசெய்யும் விதமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஓடிடி சேவைக்கு மாற நெட்ஃப்ளிக்ஸ், அமெஸான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் உதவியுள்ளன. கிருமிப்பரவல் சூழலில் திரையரங்குகளுக்கு பலர் செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே திரையரங்க அனுபவத்தைத் தருகிறது ஓடிடி.

தமிழ் திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு, பிளாக்டிக்கெட்சினிமாஸ்.காம் (BlackTicketCinemas.com) என்ற புதிய ஓடிடி தளத்தைத் தொடங்கியுள்ளார். ஹேங்ஓவர் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் சேவை, www.blackticketcinemas.com தளத்திலும் 'கூகில் பிளே ஸ்டோர்' செயலி பதிவிறக்கத் தளத்திலும் கிடைக்கப்பெறும்.

இந்தச் சேவையைப் பயன்படுத்த சந்தாதாரர் ஆக இருக்க வேண்டியதில்லை என்றும் பார்க்க விரும்பும் காணொளிகளுக்காக மட்டும் கட்டணம் செலுத்தினாலே போதும் என்று திரு வெங்கட் பிரபு, 'வர்ணம்' மலேசிய இணையத் தளத்திடம் ஒரு சிறப்பு பேட்டியின்போது கூறினார். கட்டணம் செலுத்த வேண்டிய படைப்புகள் மட்டுமின்றி, பயனீட்டாளர்கள் இலவசமான படைப்புகளையும் பார்க்கலாம். இசை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் வீட்டில் இருந்தபடியே கண்டு களிக்கலாம்.

தற்போதைய கொவிட்-19 சூழலில் மக்களின் எதிர்பார்ப்புகள் வெகுவாக மாறியிருப்பதால் மற்ற வழக்கமான ஓடிடி சேவைகளிடமிருந்தும் தனித்தன்மையுடன் திகழ வேண்டிய அவசியம் இருப்பதாக திரு பிரபு தெரிவித்தார். "விலை மற்றும் தோற்ற அளவில் நாங்கள் மாறுபட்டுள்ளோம். உலங்கெங்கும் உள்ள இந்தியர்கள், திரைப்படங்களைப் பார்க்கும் விதத்தை ஆராயும் ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைத்து 'கசடதபற' திரைப்படத்தை வெளிநாடுகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இது உலகமயமாதலைப் பிரதிபலிப்பதுடன் இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் சந்தைகளில் போட்டித்தன்மையை உருவாக்கும்," என்று கூறிய அவர், மலேசிய திரைப்படங்களும் நிகழ்ச்சிகளும் இந்தச் சேவைகளில் சேர்க்கப்படலாம் என்றார்.

சிம்புதேவன் இயக்கி, ஹரிஷ் கல்யான், சாந்தனு, ரெஜினா மற்றும் பிரேம்ஜி முக்கிய வேடங்களை ஏற்று நடித்திருக்கும் 'கசடதபற' திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.

(நன்றி: வர்ணம்)

இணைப்பு: https://varnam.my/varnam-exclusive/2021/46670/black-ticket-cinema-venkat-prabhus-new-ott-platform-with-pay-as-you-go-basis/