'நெற்றிக்கண்' படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பி உள்ளார் அஜ்மல்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'கோ' படம் அஜ்மலை பெரிய உயரத்துக்குக் கொண்டு செல்லும் என கணிக்கப்பட்டது. எனினும் அடுத்து நடித்த சில படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை. அதனால் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்ததாகச் சொல்கிறார்.
இடையில் சில படங்களில் நாயகனாக நடித்த போதிலும், அஜ்மலுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் நன்கு ஒத்துப்போகிறது, பொருத்தமாக உள்ளது என சில இயக்குநர்கள் முடிவுகட்ட, அதற்கு அஜ்மல் தரப்பில் எந்தவித எதிர்ப்பும் இல்லை. இயக்குநர்களின் அந்த முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டார். நயன்தாராவுடன் நடித்த 'நெற்றிக்கண்' படத்திலும் இவர்தான் வில்லன்.
"தொடர்ந்து வில்லனாக மட்டும்தான் நடிப்பீர்களா என்று ரசிகர்கள் சிலர் கேட்கின்றனர். அப்படியெல்லாம் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. என் அறிமுகப் படமான 'அஞ்சாதே'வில் நடித்தபோது எனக்கு சினிமா துறை குறித்த புரிதல் ஏதும் இல்லை. இயக்குநர் மிஷ்கின் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்தேன், அவ்வளவுதான்.
"அடுத்த படம் 'திருதிரு துறுதுறு'. அது ஒரு நகைச்சுவைப் படம். அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். இயல்பாகவே நானும் கொஞ்சம் கலகலப்பான ஆள்தான். அதனால் அர்ஜுன் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிக்க முடிந்தது.
"இந்தப் படத்தைப் பார்த்துதான் இயக்குநர் கே.வி.ஆனந்த் என்னை 'கோ' படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு எனது திரையுலகப் பயணம் வேகம்பிடித்தது," என்கிறார் அஜ்மல்.
தாம் முதல்வராக நடித்தால் ரசிகர்கள் அதை ஏற்பார்களா என்ற சந்தேகம் இவருக்கு இருந்ததாம். அதை கே.வி.ஆனந்திடம் தயக்கமின்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவரோ, 'உங்களுக்கு ஏன் அந்தக் கவலை, சொல்வதைச் செய்யுங்கள்... நல்ல பெயர் கிடைக்கும்' என்றாராம். ஆனால் கே.வி.ஆனந்த் சொன்னது போன்று தமக்கு பெரிய அளவில் பாராட்டு கிடைத்ததாகச் சொல்கிறார் அஜ்மல்.
கடந்த பதினைந்து ஆண்டுகாக நடித்து வரும் இவரைப் பற்றி சில விஷயங்கள் பலருக்குத் தெரியாது. அஜ்மல் அடிப்படையில் ஒரு மருத்துவர். நடிப்பை நம்பி படிப்பை கோட்டை விட்டுவிடக் கூடாது என்று குடும்பத்தார் கவலைப்பட்டுள்ளனர். அதனால் மருத்துவ மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போதும்கூட, திரையுலகைப் பிரியமுடியாமல் தவித்துப்போனாராம். அதை உணர்ந்த குடும்பத்தார், 'நீயே முடிவெடுத்துக்கொள்' என்று பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
"அதன்பிறகு எந்தச் சிக்கலும் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வதானால் 'டாக்டரா... ஆக்டரா...' என்பதில் நான் எதைத் தேர்வு செய்தேன் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.
"வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு எனது திரையுலகப் பயணத்தை மீண்டும் தொடக்கத்தில் இருந்து கட்டமைக்க வேண்டி இருந்தது. முதலில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்தேன். நல்ல குழு, நல்ல படம் என்பதால் ரசிகர்கள் என்னைப் பற்றி மீண்டும் பேசத் தொடங்கினர். அடுத்து, 'தேவி-2' படத்தில் பிரபுதேவா, இயக்குநர் ஏ.எல்.விஜய் என்று மேலும் ஒரு நல்ல குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது," என்று கூறும் அஜ்மல், அதன்பிறகு எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை.
மீண்டும் ஒரே மாதிரியான வேடங்களே தேடி வந்தனவாம். அதனால் சிறிய இடைவெளி விடலாம் என்று அப்போது முடிவு செய்திருக்கிறார்.
"அப்போதுதான் 'நெற்றிக்கண்' இயக்குநர் மிலிந்தை சந்தித்தேன். அந்தச் சமயத்தில் 'அவள்' என்ற திகில் படத்தை இயக்கி முடித்திருந்தார்.
"எனக்கான கதாபாத்திரம் அமையும், நிச்சயம் அழைப்பதாகக் கூறி இருந்தார். சொன்னபடியே அவர் தொடர்பு கொண்ட போது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
"எனினும் வில்லன் கதாபாத்திரம் என்று அவர் சொன்னபோது தயங்கினேன். உடனே மிலிந்த், 'உங்களுக்கு எதிராக நடிக்கப்போவது நயன்தாரா. இது எலிக்கும் பூனைக்கும் இடையேயான துரத்தலை விவரிக்கும் கதை' என்றாா்.
"வில்லனாக நடித்தால் பெண்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற தயக்கம் இருந்தது உண்மை. காரணம், நாயகனாக நடிக்கவேண்டும் என்ற எண்ணம் இன்னும் உள்ளது. எனினும் நயன்தாராவுடன் இணைந்து நடித்ததால் என் தயக்கத்தைக் கைவிட்டு நடித்தேன்," என்கிறார் அஜ்மல்.
அடுத்து ஒரு மலையாளப் படத்திலும் நயன்தாராவுடன் இணைந்துள்ளாராம். என்ன ராசியோ தெரியவில்லை. இதுவரை நான்கு முறை முதல்வராக நடித்துவிட்டார். அதிலும், ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 'அம்மா ராஜ்யம் லோ கடபா பிட்டலு' என்ற தெலுங்குப் படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியாக நடித்து அசத்தி இருந்தார்.
, :

