உச்சகட்ட சவால்களை கொண்ட 'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்ச்சி

4 mins read
43cbc2cd-c89c-4cee-b8f0-644ab9889d79
-

தமிழ் தொலைக்காட்சியில் ஜீ தமிழ் ஒளிவழியில் உச்சகட்ட சவால்களை கொண்ட 'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்ச்சி முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

முன்னணி தமிழ் பொழுதுபோக்கு ஒளிவழியான ஜீ தமிழ், தமிழ் தொலைக்காட்சித் துறையில் முத்திரை பதித்த பல பிரபல மற்றும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றதாகும். தென்னிந்திய தொலைக்காட்சிகளின் வரலாற்றில் முதல் முறையாக ரியாலிட்டி, நாடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை இதுவரை காணாத வகையில் மிகச்சிறப்பாக தனித்துவமாக ஒருங்கிணைத்து, உலகின் மிகவும் சவாலான தொடரான -'சர்வைவர்' மூலம் ஒளிபரப்பவுள்ளது.

Watch on YouTube

உலகின் மிகவும் சவாலான ரியாலிட்டி தொடரான 'சர்வைவர்', இவ்வகை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று ஜீ தமிழ் நம்புகிறது. மேலும், அனைத்துலக அளவில் வெற்றிகரமாக ஒளிபரப்பான இது போன்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியில், அதன் பரபரப்பை கூட்டுவதில் தொகுப்பாளருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. தனது ஆற்றல் மிக்க வர்ணனை மற்றும் உற்சாகத்தின் மூலம் 90 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக்கும் திறன் மிக்கவராக அத்தொகுப்பாளர் இருக்கவேண்டியது அவசியம். இது போன்ற எதிர்பார்ப்புகள் மிக்க ஒரு தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியை நமது 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன் தொகுத்து வழங்கவுள்ளார்.

திரைத் துறையில் நாற்பதாண்டு காலம் தனது அனுபவம் உள்ள நடிகர் அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சித் துறையில் அடியெடுத்து வைக்கின்றார்.

சர்வைவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட நடிகர் அர்ஜுன், "அனைத்துலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான இந்த சர்வைவர் நிகழ்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உலகம் முழுவதும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான சர்வைவரில் நான் ஒரு முக்கிய பங்கு வகிப்பது என்பது, இதுவரை நான் கண்டிராத ஒரு புதுமையான அனுபவமாகவே இருக்கும். நிகழ்ச்சியின் இந்த மூன்று மாத பயணத்தில், ஒரு தனித்த தீவில் போட்டியாளர்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும்", என்று தெரிவித்தார்.

பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான பானிஜே ஏசியா, உலகளவில் வெற்றிகரமாக இயங்கி வருவதற்கு, இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு அனைத்துலக தழுவலிலும் பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வருவதே சான்றாகும். இதனால் உலகெங்கும் இந்நிகழ்ச்சிக்கு தீவிர ரசிகர் கூட்டம் உள்ளது.

நிகழ்ச்சியின் தனித்தன்மை யாதெனில் இயற்கையான சூழல் என்பது மட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சி ஒரு அற்புதமான தீவில் நிகழவுள்ளதால் இந்நிகழ்ச்சிக்கும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் இது ஒரு தனித்துவமான அனுபவத்தினைத் தரும்.

இந்நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் இயற்கையின் ஆற்றலுக்கு எதிராக தங்களது திறனை வெளிப்படுத்தி போராட வேண்டும். உடல் வெப்பத்திற்காக தீமூட்டுவது, அல்லது இயற்கை பொருட்களைக் கொண்டு ஒரு குடில் அமைப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் துவங்கி, உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியங்களைத் தேடி பெறுவது உள்ளிட்ட சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

இந்த சூழலை மேலும் கடுமையாக்கும் விதமாக போட்டியாளர்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் கொடுக்கப்படும், ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு அதற்கான பரிசுகளை வென்று, போட்டியிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்களைக் காத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியாளரின் மன, உடல் வலிமையை அனைத்து விதத்திலும் சோதித்து, எல்லா விதமான சவால்களை எதிர்கொள்ளும் மனிதனின் திறனை கண்டறிவதற்கே இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருமதி த்ரிப்தா சிங் இவிபி ஆசியா பசிபிக் கூறுகையில், "சர்வைவர் நிச்சயமாக ஒரு சிறந்த ரியாலிட்டி ஷோ வடிவங்களில் இருக்கும். குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற சந்தைகளில், புதிய நகர்ப்புற பார்வையாளர்களுடன் புதிய அளவுகோல்களை அமைக்கும்.

"ஒரு ஒளிவழியாக, எங்கள் பார்வையாளர்களை புதுமையான கன்டென்ட் மற்றும் ரியாலிட்டி பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தவும் மகிழ்விக்கவும் நாங்கள் எப்போதும் உறுதியளித்துள்ளோம்.

"சர்வைவர் நிச்சயமாக இந்தியாவில் ரியாலிட்டி ஷோ வடிவங்களில் புதிய வரையறைகளை உருவாக்கும். தயாரிப்பு மதிப்பீடு முதல் பல்வேறு வகையான தனித்திறமைகள் வரை அனைத்திலும் ஜீ தமிழ் ஒளிவழி, பானிஜே நிறுவனத்துடன் தொலைக்காட்சித் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தினை உயர்த்தும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது," என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய பானிஜே ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அதன் நிறுவனருமான திரு தீபக் தர், "சர்வைவர் உலகெங்கிலும் தனக்கென ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும். இதன் அமைப்பே தனித்துவமானதாகவும், மாற்றத்தக்கதாகவும் உள்ளது. மேலும் இது அனைத்து விதமான நேயர்களின் உணர்வுகளோடும் பொருந்தக்கூடிய தன்மையுள்ள ஒரு நிகழ்ச்சியாகும்.

"தமிழ் தொலைக்காட்சிகள் எப்போதுமே வித்தியாசமான புதுமைகளை திரையில் காண்பிக்கும் இயல்பு கொண்டவை. இது போன்ற ஒரு ரியாலிட்டி ஷோ இவ்வகையான நிகழ்ச்சிகளை மேலும் விரிவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது," என்று தெரிவித்தார்.

சர்வைவர் நிகழ்ச்சி தொடர்பான விளம்பரங்கள் விரைவில் தொடங்கப்பட்டு, ஜீ தமிழ் ஒளிவழியில் வெளிவர இருக்கின்றன. நிகழ்ச்சி எபிசோடுகள் மற்றும் எபிசோடில் இருந்து அன்-கட் காணொளிகளை இணையத்தில் 'ஓடிடி' தளமான ZEE5ல் காணலாம்.

இன்ஸ்டகிராம், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஜீ தமிழை APAC சப்ஸ்க்ரைப் செய்து சர்வைவர் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.