இயக்குநரை துரத்திய டாப்சி

இயக்குநரை துரத்திய டாப்சி

3 mins read
fb9dd989-d460-483b-957a-7816ee0f8a3a
-

"என்­னி­டம் இருந்த ஒரு நல்ல கதைக்­காக ஆறு மாதங்­கள் என்னை இடை­வி­டா­மல் தொடர்புகொண்­டார் நடிகை டாப்சி. அவ­ரது ஆர்­வம் என்னை வியக்க வைத்­தது," என்­கி­றார் இயக்­கு­ந­ரும் கதா­சி­ரி­ய­ரு­மான நந்தா பெரி­ய­சாமி.

தன் கதையை தமி­ழில்­தான் பட­மாக்க வேண்­டும் என்று நந்தா உறு­தி­யாக இருக்க, டாப்­சியோ முதலில் இந்­தி­யில் படம் எடுத்து­விட்டு, பிற­மொ­ழி­க­ளுக்­குச் செல்­லு­மாறு வலி­யு­றுத்­தி­னா­ராம். ஒரு கட்­டத்­தில் வேறு வழி­யின்றி டாப்சி சொன்­னதை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார் நந்தா. அப்­படி உரு­வா­ன­து­தான் இந்­தி­யில் 'ராஷ்மி ராக்­கெட்' இந்தித் திரைப்­ப­டம்.

"தமி­ழில் 'மெடல்' என்ற தலைப்­பில் ஒரு கதையை எழுதி ஒளிப்­ப­தி­வா­ளர் ராம்ஜி மூல­மாக நயன்­தா­ராவை அணு­கி­னேன். அன்று தொடங்கி பத்­தா­வது நாளில் கதை சொல்­வ­தற்கு நேரம் கொடுத்­தி­ருந்­தார் நயன்­தாரா. ஆனால் அவர் ஒதுக்­கி­யது வெறும் 15 நிமி­டங்­கள்­தான். அதற்­குள் எப்­படி கதை சொல்­வது என்று யோசித்­தேன்.

"என் மக­னுக்கு அனி­மே­ஷன் துறை­யில் ஆர்­வம் அதி­கம். அவ்­வப்­போது அது தொடர்­பாக ஏதா­வது முயற்சி செய்­வான். எனவே, அனி­மே­ஷன் மூலம் ஒரு காணொ­ளியை உரு­வாக்கி, அதன் வழி கதை­யை சுருக்­க­மா­கச் சொல்­வது என முடிவு செய்­தேன்.

"15 நிமி­டங்­கள் ஓடும் அந்த அனி­மே­ஷன் தொகுப்பு நயன்­தா­ராவை வெகு­வாக கவர்ந்­து­விட்­டது. அது தட­கள வீராங்­கனை குறித்த கதை. அரு­மை­யான கதை என்று சொல்லி, தாமே நடித்து, தயா­ரிக்­க­வும் முன்­வந்­தார்.

"எனி­னும், தட­கள வீராங்­கனை­யாக நடிக்க உடல் தோற்­றம் முக்­கி­யம். கடு­மை­யாக உழைத்­தா­லும் அந்த உடல் அமைப்­பைக் கொண்டு வர ஆறு மாதங்­க­ளா­வது ஆகும். அப்­போது அவரே என்னை அழைத்து, தம்மால் உடல் அமைப்பை மாற்ற இய­லாது என்று வெளிப்­ப­டை­யாக கூறி­விட்­டார்," என்­கி­றார் நந்தா.

அதன் பிறகு ஆண்ட்­ரியா, தமன்னா என நிறைய பேரி­டம் தாம் எழு­திய கதை­யைச் சொன்­னா­ராம். ஆனால் ஏதா­வது ஒரு கார­ணத்­தால் யாரும் நடிக்க முன்­வ­ர­வில்லை.

பத்து கோடி ரூபாய் செல­வா­கும் என்று நந்தா கொடுத்த கணக்­கும் தயா­ரிப்­பா­ளர்­களை யோசிக்க வைத்­தி­ருக்­கிறது.

அப்­போ­து­தான் இயக்­கு­நர் மனோ­பாலா மூல­மாக இந்­தி­யில் முன்­னணி நடி­கை­யாக வளர்ந்­துள்ள டாப்­சி­யைச் சந்­திக்­கும் வாய்ப்பு நந்­தா­வுக்கு கிடைத்­துள்­ளது.

"கதை­யைக் கேட்ட அடுத்த நிமி­டமே அதில் தாம் நடிப்­பது உறுதி என்று கூறி­னார் டாப்சி. எனக்­கும் மகிழ்ச்­சி­யாக இருந்­தது. தமி­ழி­லும் தெலுங்­கி­லும் நான் இயக்­கு­கி­றேன். இந்­திக்கு ஏற்­ற­து­போல் சில மாற்­றங்­க­ளைச் செய்து தரு­கி­றேன். நீங்­கள் பட­மாக்­குங்­கள் என்­றேன்.

"ஆனால், டாப்­சியோ நீங்­கள் குறிப்­பி­டும் தொகை தமிழ், தெலுங்கு திரை­யு­ல­குக்கு மிக­வும் அதி­கம். எந்த தயா­ரிப்­பா­ள­ரும் இதற்கு ஒப்­புக்­கொள்ள மாட்­டார். எனவே முத­லில் இந்­தி­யில் பட­மாக்­கு­வோம், பிறகு மற்ற மொழி­களில் முயற்சி செய்­யுங்­கள் என்­றார் டாப்சி.

"எனக்கு அதில் உடன்­பா­டில்லை. அத­னால் அந்­தச் சந்­திப்­பின்­போது கதையை அவ­ரி­டம் ஒப்­ப­டைக்­கா­மல் வந்­து­விட்­டேன். அதன் பிறகு சுமார் ஏழு மாதங்­கள் அவர் என்­னி­டம் தொடர்ந்து பேசி வந்­தார்.

"நான் அவர் சொன்ன ஏற்­பாட்­டுக்கு ஒப்­புக்­கொள்­ளா­த­தால் ஒரு கட்­டத்­தில் கோப­மா­கி­விட்­டார். 'இப்­ப­டி­யொரு கதையை வைத்­துக்­கொண்டு ஏன் பிடி­வா­தம் பிடிக்­கி­றீர்­கள்?' என்று உரி­மை­யோடு கோபத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்.

"மேலும் நாய­கியை மைய­மாக வைத்து எடுக்­கப்­படும் தமிழ் படத்­துக்கு யாரும் பத்து கோடி முத­லீடு செய்ய மாட்­டார்­கள் என்று டாப்சி தரப்­பில் எனக்கு புரிய வைக்­கப்­பட்­டது. அத­னால் மன­த­ளவில் சமா­தா­னமடைந்து கதை­யைக் கொடுத்­தேன்.

"35 கோடி ரூபாய் செல­வில் படத்தை இந்­தி­யில் 'ராஷ்மி ராக்­கெட்' என்ற தலைப்­பில் எடுத்­த­னர். அந்­தப் படம் தமி­ழுக்கு வரு­வ­தற்கு முன்பு ஒரு படம் எடுத்­து­வி­டு­வோம் என்ற முடி­வு­டன் `ஆனந்­தம் விளை­யா­டும் வீடு' கதையை எழுதி பட­மாக்கி உள்­ளேன்," என்­கி­றார் நந்தா.

ஒரு நல்ல கதைக்­காக இந்­தித் திரை­யு­ல­கி­ன­ரும் அங்­குள்ள முன்­னணி நடி­கை­யும் எந்­த­ளவு பொறுமை காக்­கி­றார்­கள், முயற்­சி­களை மேற்­கொள்­கி­றார்­கள் என்­பதை விவ­ரிக்­கவே தமது அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­ட­தா­கச் சொல்­லும் நந்தா, பெரும் நட்­சத்­தி­ரப் பட்­டா­ளத்தை வைத்து தமது படத்தை உரு­வாக்கி உள்­ளா­ராம். கொரோனா, குடும்ப உற­வு­கள் எவ்­வ­ளவு முக்­கி­யம் என்­பதை எல்­லோ­ருக்­கும் புரி­ய­வைத்­துள்­ள­தாக குறிப்­பி­டு­ப­வர், தமது படம் உணர்­வு­பூர்­வ­மாக இருக்­கும் என்­கி­றார்.

"நான் சொல்லும் கதையைத் திரையில் பார்க்கும் எவருக்கும் இதயம் கசிந்து, கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீராவது வரும். பிரிந்த குடும்பங்கள் ஒன்றுசேரும் என நம்புகிறேன்," என்கிறார் நந்தா பெரியசாமி.