விமல் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'வெற்றி கொண்டான்'. வேலுதாஸ் இயக்கியுள்ளார்.
இது சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டம் என்பதால் அதையே கதைக்களமாக்கி உள்ளார்.
சென்னையில் வசிக்கும் கதாநாயகன் 'யூடியூப்' சேனல் ஒன்றை நடத்துகிறார். அதன் மூலம் நிறைய சமூக சேவைகளைச் செய்வது அவரது வழக்கம். அவ்வாறு ஒருமுறை அவர் செய்யும் உதவியே உபத்திரவமாக மாறிவிடுகிறது.
அந்தப் பிரச்சினையை எவ்வாறு சமாளிக்கிறார், எப்படி அதிலிருந்து மீள்கிறார் என்பதுதான் கதை. இதில் காதல், நட்பு, குடும்ப உணர்வுகள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
கதையை எழுதும்போது யார் கதாநாயகன் என்பது குறித்து பெரிதாக யோசிக்கவில்லை. அதேசமயம் முன்னணி நடிகர் ஒருவர் நடித்தால், அது மிக எளிதில், விரைவில் மக்கள் மத்தியில் சென்றடையும் என நினைத்தேன். அதனால் பல கதாநாயகர்களை அணுகி கதை சொன்னேன்.
"ஆனால் கதை பிடித்திருந்தாலும், அறிமுக இயக்குநரை நம்பி எப்படி களமிறங்குவது என அவர்கள் யோசித்தனர். அவர்களுடைய முகத்தில் இந்தக் கவலையும் தயக்கமும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர்களுடைய மன ஓட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போதுதான் விமல் என் நினைவுக்கு வந்தார்.
"விமல் படம் என்றாலே கிராமத்துப் பின்னணியில், வேட்டி சட்டை என மண்வாசனையுடன் இருக்கும். அப்படி அறியப்பட்ட விமலை நாம் ஏன் அடியோடு மாற்றக்கூடாது எனத் தோன்றியது. அவரது இந்தத் தோற்றத்தை மாற்றி, நவீனமாக மாற்றியபோது, அச்சு அசலாக சென்னைப் பையனாகவே மாறிப்போனார்."
விமல் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒத்துழைத்தாரா?
"நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக ஒத்துழைத்தார். 'வெற்றி' என்ற அவருடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவர் வழங்கிய நடிப்பும் உழைப்பும் என்னை வியக்க வைத்தது.
"ஒரு நடிகராக அவருடைய பங்களிப்பை எந்த வகையிலும் குறைசொல்ல இயலாது. முதன்முறையாக இதில் முழுநீள அதிரடி நாயகனாக விமலைப் பார்க்க முடியும். சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.
"கதாநாயகி மிஷா நரங். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். கோடம்பாக்கத்துக்குப் புது வரவு என்பதால், ரசிகர்களுக்கு புதியதொரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் தேர்வாக இருப்பார்.
"கதைப்படி லாவண்யா என்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். சொல்லிக்கொடுத்தபடி நடித்தால் அதுவே போதும் என்ற எண்ணத்துடன்தான் ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, ஜோதிகாவைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
"தமிழுக்குப் புதிது என்றாலும் ஏற்கெனவே தெலுங்கு, கன்னட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார் மிஷா. எனவே சினிமா துறை சார்ந்த நடைமுறைகளை அறிந்து வைத்துள்ளார்," என்று பாராட்டுகிறார் வேலுதாஸ்.
எத்தனை நீளமான வசனம் என்றாலும் அதை இந்தியில் எழுதி வைத்து, மனப்பாடம் செய்து, பிழை இன்றி பேசி நடித்தாராம் மிஷா. விமல் பற்றி முன்பே கேள்விப்பட்டதாகச் சொன்னாராம். அவருடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
கதைப்படி விமலின் நண்பராக வருகிறார் சதீஷ். வில்லனாக பில்லி முரளியும் செளந்தரராஜா, சுரேஷ் மேனன், 'வழக்கு எண்' முத்துராமன், 'அடங்காதே' சண்முகம் போன்ற அனுபவ நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்றுள்ளனர். படம் ஆண்டு இறுதிக்குள் வெளியீடு காண உள்ளது.