சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இத்தகவலை அவரே தெரிவித்துள்ளார்.
படப்பணிகளுக்கு மத்தியில் ரசிகர்களுடன் அண்மையில் கலந்துரையாடினார் சந்தானம்.
அப்போது அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படங்கள் குறித்து அண்மைய தகவல்களைத் தெரிவிக்குமாறு ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த சந்தானம், சில படங்களின் தலைப்புகளைக் குறிப்பிட்டார். அப்போது 'சர்வர் சுந்தரம்' பட வெளியீடு என்ன ஆனது என்று அதே ரசிகர் குறிப்பிட்டு கேட்க, மிக விரைவில் 'ஓடிடி'யில் அப்படத்தைக் காண இயலும் என்றார் சந்தானம்.
ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவான 'சர்வர் சுந்தரம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. இதில், சந்தானம் ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.
மேலும், மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, 'செஃப்' தாமோதரன், வெங்கடேஷ் பட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அநேகமாக அக்டோபர் தொடக்கத்தில் 'சர்வர் சுந்தரம்' ரசிகர்களை சந்திக்க வரக்கூடும்.

