திரையுலகில் பணியாற்றுவதன் மூலம் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி ஷிரின் காஞ்ச்வாலா. 'டிக்கிலோனா' படத்தின் நாயகியான இவர் மும்பையைச் சேர்ந்தவர்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றார் ஷிரின். திருமணம் நடப்பது போன்ற காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், நடனக் கலைஞர்களுடன் நடிக்க வேண்டி இருந்ததாம்.
"ஒரு பாடலுக்கு அனைவரும் சேர்ந்து நடனமாட வேண்டும் என்றார் இயக்குநர். இதுவரை நாயகர்களுடன் மட்டும் இணைந்து நடனமாடியுள்ளேன். அவை எளிதான நடன அசைவுகளுடன் கூடிய பாடல்கள் என்பதால் சிரமமாக இல்லை. ஆனால், அண்மைய படப்பிடிப்பில் திருமணம் தொடர்பான பாடல் என்பதால் கனமான புடவை, பாரம்பரிய நகைகளை அணிந்து நடனமாட வேண்டி இருந்தது. போதாத குறைக்கு கொஞ்சம் அசந்தாலும் தடுக்கி கீழே விழச் செய்யும் காலணிகளையும் கொடுத்தனர்.
"நிச்சயமாக தவறு செய்வேன் அல்லது தடுமாறி கீழே விழுவேன் என்ற அச்சத்துடன் படப்பிடிப்பில் பங்கேற்றேன். ஆனால் துணை நடனப் பயிற்சியாளர்கள் என் மனநிலையைப் புரிந்துகொண்டு தைரியம் அளித்தனர்.
"அவர்களிடம் பாடல் வரிகளுக்கான அர்த்தம் அவற்றுக்கான உடல்மொழி ஆகியவற்றைத் தெரிந்து கொண்டேன். மேலும், படப்பிடிப்புக்கு முன்பு நடந்த ஒத்திகையும் உதவிகரமாக இருந்தது. எனவே என்னைப் போன்ற நடிகைகள் துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், உதவி இயக்குநர்களின் உதவியைக் கேட்டுப் பெற்றாலே போதும், எந்தவித சங்கடங்களும் பிரச்சினைகளும் ஏற்படாமல் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடலாம்," என்கிறார் ஷிரின்.
ஷிரின்

