வருடத்துக்கு ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் போதும், அது நகைச்சுவைப் படைப்பாகவும் தனது பாணிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் 'மிர்ச்சி' சிவா.
அவருக்கே உரிய நகைச்சுவை, நக்கல், நையாண்டியுடன் உருவாகி இருக்கிறது 'இடியட்'. ராம்பாலா இயக்கி உள்ளார். மேலும் 'காசேதான் கடவுளடா' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
"இந்த இரு படங்களும் கூட வழக்கம்போல் ரசிகர்களை சிரிக்க வைக்கும். நான் இப்படிப்பட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். இந்தப் படத்துக்கு சிவா பொருத்தமாக இருப்பார் என்று நினைப்பவர்கள் என்னைத் தேடி வருகிறார்கள்.
"மற்றவர்கள் பேசும் வசனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுப்பதுதான் எனது வழக்கம். நகைச்சுவையாக இதைச் செய்வதால் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. இதை எனது திறமை என்று நினைக்க வேண்டாம். எனக்கு இது மட்டும்தான் தெரியும். நடிக்கத் தெரியாது," என்று சொல்லி பெரிதாகச் சிரிக்கிறார் சிவா.
இவரிடம் கதை சொல்ல விரும்புவர்கள், எடுத்த எடுப்பிலேயே, 'நீங்க வேலையில்லா பட்டதாரி', 'திருடன்', 'வெட்டிப்பேர்வழி' என்று கதாபாத்திரத்தின் தன்மையைச் சொல்லிவிடுவார்கள். அதைக் கேட்ட பிறகுதான் சிவாவுக்கும் மீதி கதையைக் கேட்கும் உற்சாகம் வருமாம்.
சில சமயங்களில் 'சீரியஸான', கனமான கதாபாத்திரங்களுடன் சிலர் சிவாவை அணுகியதுண்டு. ஆனால், அது போன்ற வேடங்கள் தமக்கு ஒத்துவராது என்று தெளிவாக, திட்டவட்டமாகச் சொல்லி திருப்பி அனுப்பிவிடுவாராம்.
"ஒருமுறை புது இயக்குநர் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. தனது காதலிக்காக தன் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க முன்வரும் உண்மையான காதலனாக நடிக்குமாறு கேட்டு என்னை அணுகி இருந்தார்.
"அவர் கதையைச் சொல்லி முடித்ததும், ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது என்றேன். வேறொன்றும் இல்லை. இந்த கதை நான் நடித்து திரைப்படமாக வெளிவந்தால் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படமாக விருது பெறும் என்றேன். அதைக் கேட்டதும் அந்த இயக்குநர் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தார்.
"இதுபோன்று மேலும் சிலர் நல்ல கதைகளுடன் அணுகியபோதும் அந்த வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை," என்று சொல்பவர், காலஞ்சென்ற நடிகர் விவேக்குடன் தாம் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி வாழ்நாள் முழுவதும் தன் நினைவில் நிற்கும் என்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பின்போது இருவரும் ஒரே தங்கும்விடுதியில்தான் வெவ்வேறு அறைகளில் தங்கி இருந்தார்களாம். அப்போது தினந்தோறும் மணிக்கணக்கில் பேசும் வாய்ப்பு கிடைத்ததாம்.
"அவருடன் இணைந்து பணியாற்றியதே மிகப்பெரிய கௌரவம். அதைவிட அவருடன் சமமாக உட்கார்ந்து பேச முடிந்ததும் பெரிய விஷயம். தினமும் படப்பிடிப்பு முடிந்தபின் மாலையில் அவரைச் சந்திப்பேன். அப்போது தாம் நடித்த படங்கள், அவற்றில் கையாளப்பட்ட கதைகள், கதாபாத்திரங்கள் ஆகியவை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொள்வார்.
"அவர் நடித்து வெற்றிபெற்ற நகைச்சுவைக் காட்சிகள் எவ்வாறு உருவாகின என்றும் கூறுவார். அந்த நாட்களை பெரிய பொக்கிஷமாக என் மனதில் பாதுகாப்பேன்.
சிறு வயது முதல் அவரது நகைச்சுவைக் காட்சிகளைக் பார்த்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் தூண்டியவர் அவர். அதனால்தான் இவரைப் போன்ற கலைஞர்களின் பங்களிப்பு காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் என்கிறார்கள்.
"இந்த கொரோனா காலகட்டத்தில் இருவரது இழப்பு என்னை வெகுவாக பாதித்துள்ளது.
ஒன்று விவேக் சார் மரணம். மற்றொன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு. இருவருமே காலத்தால் அழியாத சாதனைகளைப் படைத்தவர்கள்," என்று நெகிழ்கிறார் சிவா.
என்னதான் தம்மையே கேலி செய்துகொண்டு பிறரை சிரிக்க வைத்தாலும் சிவாவும் தமக்கென சில நல்ல கொள்கைகளை வைத்துள்ளார். பாலியல் காட்சிகளும் இரட்டை அர்த்த வசனங்களும் தனது படங்களில் இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம்.
தம்மிடம் தெரிவித்த கதை, காட்சிகளுக்கு மாறாக இவற்றை திணிக்க முற்பட்டால் தம்மால் நடிக்க இயலாது என மறுத்துவிடுவாராம்.
"இன்றைய நவீன காலகட்டத்தில் ஏராளமான இளையர்கள் திரைப்படங்களை உற்றுக் கவனிக்கிறார்கள். திரையின் நாயகர்களை பல விஷயங்களில் பின்பற்ற விரும்புகிறார்கள். அந்த இளையர்களை தவறான திசையில் வழிநடத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்," என்று சொல்லும் சிவா, வாய்ப்புகளுக்காக அதிகம் மெனக்கெடுவதில்லை.
தானாகத் தேடி வரும் படங்களில் நடிப்பவர், தனக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமைந்தால்தான் நடிப்பது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
, :

