பதற்றம், உடல் பருமன் பிரச்சினைகளால் தாம் கடுமையாக அவதிப்பட்டதாகச் சொல்கிறார் மஞ்சிமா மோகன்.
உருவக்கேலிக்கு ஆளான காலகட்டத்தில் தாம் கடும் மன உளைச்சலால் தவிக்க நேரிட்டதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமாவுக்குப் பின்னர் நல்ல வாய்ப்புகள் அமைந்தன. அவற்றில் நடித்து வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு காலில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகு சில மாதங்கள் ஓய்வெடுத்ததால் தமது உடல் எடை அதிகரித்ததாகச் சொல்கிறார் மஞ்சிமா. அதன்பிறகுதான் கேலி, கிண்டல்களுக்கு ஆளானதாகவும் சொல்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'துக்ளக் தர்பார்', 'எஃப்.ஐ.ஆர்' என இரண்டு படங்களில் நடித்திருப்பவர், பிறரைக் கிண்டல் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவேண்டும் என்கிறார். அதிலும், நடிகைகள் என்று வரும்போது சிலர் எல்லை மீறி விமர்சிப்பதாக வருத்தப்படுகிறார்.
"உடல், மனநலப் பிரச்சினைகளை நாங்களும் எதிர்கொள்வோம். ஆனால் எங்களை மட்டும் ஒருதரப்பினர் அதிகம் கிண்டல் செய்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை.
"காலில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு 'ஃபிசியோதெரபி', யோகாசனத்தில் கவனம் செலுத்தினேன். உடல் எடையை எப்படி குறைப்பது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அதன்படி நடந்துகொண்டேன்.
"இடைப்பட்ட நேரத்தில் சில நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது, என்னைப் பார்த்த அனைவருமே உடல் பருமன் குறித்து மட்டும்தான் அதிகம் கேட்டனர். இப்படி ஆகிவிட்டதே என சிலர் துக்கம் விசாரித்தனர்.இதுவே என் மன உளைச்சலுக்கு காரணமாகிவிட்டது," என்கிறார் மஞ்சிமா.
இன்று கொரோனாவுடன் வாழ உலக மக்கள் கற்றுக்கொள்வது போல் உடல் பருமனுடன் வாழ தானும் முடிவு செய்ததாகச் சொல்பவர், கதாநாயகிகள் குண்டாக இருந்தால் நடிக்கக் கூடாது என்று எந்த விதிமுறையும் திரையுலகில் இல்லை என்று சற்று கோபத்துடன் சுட்டிக்காட்டுகிறார்.
"பெரும்பாலும் இயக்குநர்களோ, உடன் நடிப்பவர்களோகூட எதுவும் கேட்பதில்லை. மற்றவர்கள்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிண்டல் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பேச்சுகள் என்னைப் பாதிக்காது என்று மனதளவில் நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன். அதேசமயம், வணிகப் படங்களில் நடிக்கும்போது அவற்றில் எனக்கான கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நான் இருக்க வேண்டும். அதனால்தான் மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ந்து பெற்று வருகிறேன்.
"மேலும், இது என் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட," என்று சொல்லும் மஞ்சிமா மோகன், தற்போதைய வாழ்க்கைமுறை காரணமாக குழந்தைகளும்கூட உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுவதாக வருத்தப்படுகிறார்.
உடல், மன நலன்களை முன்னிறுத்திச் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து அழகுக்காக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் பதிய வைத்துவிட்டோம் என்பது கவலை அளிப்பதாகவும் சொல்கிறார்.
உருவக் கேலிக்கு ஆளானதை அடுத்து கடும் மனப்பதற்றத்துக்கும் ஆளானதாகச் சொல்லும் மஞ்சிமா, அதில் இருந்து மீண்டு வர சிரமப்பட்டதாகச் சொல்கிறார்.
"மற்றவர்களுக்கு எல்லாமே நல்லவிதமாக நடப்பதாகவும் என் வாழ்க்கையில் மட்டும் அனைத்தும் தவறாக நடப்பதாகவும் நினைக்கத் தோன்றும். இதனால் மனதில் பெரும் அவநம்பிக்கையும் விரக்தியும் ஏற்படும். பல நாள்களை இந்த மனநிலையுடன் கழித்திருக்கிறேன்.
"நல்ல வேளையாக, சரியான மனிதர்களை சரியான நேரத்தில் சந்தித்ததால் இன்று உங்களுடன் இயல்பாகப் பேச முடிகிறது. இல்லையெனில் கேலி, கிண்டல்களால் வெற்றிகொள்ளப்பட்டு நான் காணாமல் போயிருப்பேன்.
"உருவக்கேலி செய்பவர்கள், அந்த இடத்தில் தங்களை வைத்து யோசித்துப் பார்க்கவேண்டும். தங்களுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் என்ன செய்வார்கள் என்று நினைத்தால் யாரையும் கிண்டல் செய்ய தோன்றாது," என்கி றார் மஞ்சிமா.

