கிராம மக்களுக்கு உதவும் தான்யா
கொரோனா நெருக்கடி வேளையில் பலரது நல்ல குணங்கள், செயல்பாடுகள் தெரியவந்துள்ளன.
திரையுலகப் பிரமுகர்கள் தங்களால் முடிந்த அளவு ஏழைகளுக்குப் பணம், பொருளுதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இளம் நாயகி தான்யா ஹோப் தினமும் சுமார் இருநூறு பேருக்கு உணவு வழங்குகிறார்.
"இதற்காக மாதந்தோறும் ஒரு கிராமத்தை தேர்வு செய்கிறேன். அங்குள்ள அனைவருக்கும் உணவு கிடைப்பதையும் உறுதி செய்கிறேன். தனியார் தொண்டு நிறுவனமும் என்னுடன் இணைந்து செயல்படுகிறது. அதனால் அதிகமான மக்களை எளிதில் சென்றடைய முடிகிறது," என்கிறார் தான்யா.
அவரது இந்தச் சேவையை அறிந்து பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ள நிலையில், உண்மையான வாழ்த்துகள் மேலும் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்.
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்
'அண்ணாத்த' படத்தை திரையிட்டுப் பார்த்த ரஜினி, மிக தரமான, நெகிழ வைக்கும் படைப்பாக உருவாகி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பே முழு படத்தையும் பார்த்துவிட்ட அவர், இந்தப் படம் பெண்களையும் குழந்தைகளையும் வெகுவாகக் கவரும் என்றாராம். "அனை வரையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் இந்தப் படம் நீண்ட காலம் பேசப்படும். படக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இப்படத்தின் வெற்றியில் பங்குண்டு," என்று படக்குழுவிடம் தெரிவித்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அஜித்தின் 'வலிமை'யும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியின் 'பேட்ட' படமும் அஜித்தின் 'விஸ்வாசம்' படமும் ஒரே சமயத்தில் வெளியாகி இரண்டுமே வசூலைக் குவித்தன.

