மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதமாக உருவாகியுள்ள 'தலைவி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியீடாகிறது.
சவால்களும் சர்ச்சைகளும் நிரம்பிய ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணத்தில், சசிகலாவின் பங்கும் முக்கியமானது. இவர்கள் நகமும் சதையுமாக, இணைபிரியாத தோழிகளாக இருந்துள்ளனர்.
எனவே, 'தலைவி' படத்தில் சசிகலாவை எப்படிக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் என்பதை அறிய சினிமா ரசிகர்களைப் போலவே அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்று (செப்டம்பர் 10) திரையரங்குகளில் இப்படம் வெளியீடாகிறது.
ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சுவாமியும் நடித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவாக நடித்திருக்கும் பூர்ணா, இப்படம் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"குறிப்பிட்ட சில வாழ்க்கை சரித்திரப் படங்கள்தான் கூடுதல் முக்கியத்துவம் பெறும். அதேபோல் வெற்றியும் பெறும்.
"அவ்வகையில் 'தலைவி' படத்தில் நானும் ஓர் அங்கமாக இருப்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சிதான்," என்கிறார் பெருமிதத்துடன்.
"என் பூர்வீகம் கேரளா என்பதால் தமிழக அரசியல் குறித்து அவ்வளவாகத் தெரியாது. ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்க வந்தபிறகு தமிழக அரசியல் குறித்து தெரிந்துகொண்டேன்.
"இயக்குநர் ஏ.எல்.விஜய் சாரிடமிருந்து திடீர்னு ஒருநாள் அழைப்பு வந்தது. "சசிகலா மேடம் பாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? சசிகலா, ஜெயலலிதாவின் வாழ்க்கை யில் எப்படி வந்தார்கள் என்று மட்டும்தான் படத்தில் காட்சிப்படுத்துவோம்," என்று சொன்னார். மேற்கொண்டு நான் எதையுமே கேட்காமல் நடிப்பதற்கு உடனே ஒப்புக்கொண்டேன்.
இந்த தகவலை நான் என் தோழிகள் சிலரிடம் சொன்னேன். அதிர்ச்சி அடைந்தவர்கள், "சசிகலா பாத்திரத்தில் மட்டும் நடிக்காதே," என அரசியல் காரணங்களைச் சொல்லி எனக்கு அன்பு மிரட்டல் விடுத்தார்கள்.
"ஜெயலலிதா - சசிகலாவின் நட்பு குறித்து பலவிதமான தகவல்களைக் கேட்டிருக்கோம். அதில் எது உண்மை, எது பொய் என்று அவர்கள் இருவருக்கு மட்டும்தானே தெரியும்? அதனால், எந்த வகையிலும் குழப்பம் இல்லாமல், ஏ.எல்.விஜய் சார் மேல முழு நம்பிக்கை வைத்து இப்படத்தில் நடித்துள்ளேன்.
"ஜெயலலிதா அம்மாவுக்கு சசிகலா மேடம் 'கேசட்' கொடுக்க வந்தது, கார் விபத்தில் சிக்கி அவர்களை மருத்துவமனையில் சேர்த்தது, இருவரும் சேர்ந்தே தேர்தல் பிரசாரத்துக்குப் போவது போன்ற காட்சிகள் படத்தில் வரும். ஒரு முக்கியமான தருணத்தில் ஜெயலலிதாவிடம் சசிகலா வாக்குறுதி கொடுப்பார்கள்.
"நான் அந்த வசனத்தைப் பேசி முடித்ததும் திரையரங்கில் கைதட்டல் அதிரும்," என்று விஜய் சார் சொன்னார்.
"இதற்கு ேமலும் ஒரு கலைஞனுக்கு வேறு என்ன புகழ் வேண்டும்," என்று கேட்கிறார் பூர்ணா (படம்).

