பரதநாட்டிய பயிற்சி, வீணை வாசிப்பு என ஊரடங்கின்போது பயனுள்ள வகையில் பொழுதைக் கழித்ததாகச் சொல்கிறார் நடிகை மஞ்சு வாரியர்,
'அசுரன்' படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய திரையுலகில் மீண்டும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
கேரளாவில் தொற்றுப்பரவல் மோசமடைந்துள்ள நிலையில், தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பதிவிட்டு வருகிறார் மஞ்சு.
திடீரென சில பாடல்களைப் பாடி காணொளியாக அவர் வெளியிட்டதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
"எனக்கு சுமாராக பாட வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது அங்குள்ள கடற்கரையில் 'என்ன விலை அழகே' என்ற ஏ.ஆர்.ரகுமான் பாடலைப் பாடினேன். அந்த இனிமையான தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.
"அப்போது எடுக்கப்பட்ட காணொளிப்பதிவை ஊரடங்கின்போது வெளியிட்டேன். அதற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து மேலும் சில பாடல்களை இவ்வாறு வெளியிட வைத்தது," என்று சொல்லும் மஞ்சு வாரியர், கடந்த இரு மாதங்களாக வீட்டுக்குள்தான் முடங்கி இருக்கிறாராம்.
மலையாளத் திரையுலகம் பல மாதங்களாக இயங்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிடுபவர், நேர்மறை சிந்தனைகள்தான் இதுபோன்ற நெருக்கடியாO தருணங்களைக் கடந்து செல்ல உதவும் என்கிறார்.
"எந்த மொழிப் படமாக இருந்தாலும், நட்சத்திர மதிப்பையும் கடந்து, நல்ல கதை என்றால் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு அளிக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தைக் குறிப்பிடலாம்.
"சினிமா உலகில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களும் ரசிகர்களின் ரசனைகளும் நிச்சயமாக கலைஞர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அண்மையில் நான் நடித்த 'ப்ரதி பூவன்கோழி' படம் உட்பட, அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்தே சமூகத்துக்குச் சொல்ல வேண்டிய, படமாக்க வேண்டிய கதைகள் நிறைய உள்ளன," என்கிறார் மஞ்சு வாரியர்.
ஒரு படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருக்கலாம். எனினும் ஒரு கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தினால் அவர்தான் படத்தின் நாயகன் என்று குறிப்பிடுபவர், மற்ற கதாபாத்திரங்களையும் நாம் இந்தக் கோணத்தில்தான் அணுக வேண்டும் என்கிறார்.
"அண்மையில்தான் 'சூரரைப் போற்று' படத்தையும் 'பாவக் கதைகள்' இணையத் தொடரையும் பார்த்தேன். இவை இரண்டுமே தரமான படைப்புகள்.
"அடுத்து, சந்தோஷ்சிவன் இயக்கத்தில் நான் நடித்துள்ள 'ஜாக் அன்ட் ஜில்' உட்பட மூன்று படங்கள் வெளியீடு காண உள்ளன. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியதில் இருந்து 'ஹவ் ஓல்ட் ஆர் யூ', 'அசுரன்' என நல்ல வாய்ப்புகள் அமைந்து வருகின்றன.
"என்னை நம்பி தனி நாயகியாக நடிக்க வைக்கிறார்கள். அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது நான் செய்த பாக்கியம். ஏராளமான கலைஞர்களின் உழைப்பால்தான் நான் சுடர்விடுகிறேன். என் உழைப்பும் திரையுலகுக்கான பங்களிப்பும் தொடரும்," என்கிறார் மஞ்சு வாரியர்.

