பேய் குடிகொண்டிருப்பதாக மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு வீட்டில் நாயகன், நாயகி உள்ளிட்ட பலர் சிக்கிக்கொள்கிறார்கள்.
அவர்களுக்கு நேரும் அனுபவங்களை நகைச்சுவையாக சொல்லப் போகிறது 'இடியட்' திரைப்படம்.
இதில் மிர்ச்சி சிவாவும் நிக்கி கல்ராணியும் இணைந்து நடிக்கின்றனர்.
சந்தானத்தை வைத்து 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரு பாகங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படம் இது. ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி, கருணாகரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.
படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்கிறார் இயக்குநர் ராம்பாலா.
"சிவாவைப் பொறுத்தவரை அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைப்பார் என இப்போதே உத்தரவாதம் அளித்துவிடலாம். அவரது நக்கல், நையாண்டிக்கு ஈடுகொடுத்து நடித்துள்ளார் நிக்கி கல்ராணி.
"குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள வீட்டில் நீண்டகாலமாக ஒரு பேய் குடிகொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. அங்கு சிக்கிக் கொள்பவர்களின் கதை இது. நகைச்சுவைப் பரவிக்கிடக்கும். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்தப் படம் மக்களை சிரிக்க வைக்கும்," என்கிறார் ராம்பாலா.

