வெளிமாநில, வெளிநாட்டு நடிகைகளை தமிழில் நடிக்க வைப்பதில் கோடம்பாக்கத்து படைப்பாளிகளுக்கு உள்ள ஆர்வம் குறையவில்லை. எனினும் தமிழ் பேசும் நடிகைகளுக்கு, தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்பு தருவதும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பதும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' என்ற புதுப் படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் என இரு தமிழ்ப் பெண்கள் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி படத்தின் தலைப்பில் தொடங்கி, கதைக்களம், கலைஞர்கள் தேர்வு என அனைத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார். யாரை எல்லாம் தனது கதாபாத்திரங்களுக்காக அணுகினாரோ, அவர்கள் எல்லோருமே கதை கேட்ட உடனே, நடிக்கச் சம்மதித்துள்ளனர். அப்படியென்ன வித்தியாசமான கதைக்களம்?
தொலைக்காட்சிப் பெட்டிகூட வராத குக்கிராமத்தில் நடக்கும் திடீர் சம்பவம் ஒட்டுமொத்த ஊடக உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. எதனால் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது, அதில் அப்படியென்ன சுவாரசியம், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்கிற ரீதியில் கதை நகருமாம்.
"பொதுவாக நம்மில் பலருக்கு உடனிருக்கும் மனிதர்கள் மீதுதான் கோபம் வரும். குறிப்பாக ஒருசிலர் அரசு அதிகாரிகளை எப்போதும் குறை கூறுவார்கள். அதிலும் நம் பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் இருக்கும்போது இந்தக் கோபம் இன்னும் உச்சத்திற்குப் போகும். அப்போது இயலாமைகளுக்கு மத்தியில் நம் சமூகத்துக்கு நம்மால் இயன்ற சின்னச் சின்னப் பங்களிப்புகளை அளிக்க வேண்டும் என்று தோன்றும். அப்படிப்பட்ட ஒரு பங்களிப்புதான் இப்படம். இதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வேறு யாருமல்ல, நாமும் உடன் வாழும் மனிதர்களும்தான்," என்கிறார் அரிசில் மூர்த்தி.
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள். 'சூரரைப் போற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார் மூர்த்தி. அதன் மூலம் கிடைத்த தொடர்புகள்தான் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. நாயகிகளாக நடிக்கும் ரம்யா, வாணி ஆகிய இருவரைத் தவிர்த்து பெரும்பாலும் புதுமுகங்கள் தான் நடித்துள்ளனர்.
"நமது கிராமங்களில் புகுந்து வந்தால் ஏராளமான விஷயங்கள் கிடைக்கும். அவற்றை திரைப்படங்களாக ஆண்டாண்டு காலமாக காட்சிப்படுத்த முடியும். நிறைய படித்துவிட்டோம், கிராமங்களை திரைப்படங்களில் காண்பித்துவிட்டோம் என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.
"எண்ணிக்கை முக்கியமல்ல. படிப்பதும் படம் எடுப்பதும் நமக்குள் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். என்னுடைய 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' படம் அப்படித்தான் இருக்கும்" என்கிறார் அரிசில் மூர்த்தி.
தாம் எதிர்பார்த்ததைவிட நாயகிகள் ரம்யாவும் வாணியும் சிறப்பாக நடித்ததாக பாராட்டும் இயக்குநர், தமிழ் தெரியும் என்பதால் கதாபாத்திரத்தை எளிதில் உள்வாங்கிக் கொண்டதாகச் சொல்கிறார்.
"முதலில் எல்லோருமே புதுமுகங்களாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். எனது கதாபாத்திரங்களுக்கு நன்றாக தமிழ் பேசக் கூடிய நடிகைகள்தான் தேவைப்பட்டனர். நிறைய பேரைப் பார்த்த பிறகு ரம்யா பாண்டியன், வாணி போஜன் இரண்டு பேரும் பொருத்தமாக இருந்தார்கள்.
"இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் மாணிக்கம் எனக்கு நல்ல நண்பர். அவருக்கு வேட்டி, சட்டை கொடுத்து ஒப்பனை போட்டு பார்த்தபோது அப்படியே ஊர்க்காரர் போன்று தோற்றம் இருந்தது. இப்படத்தில் இரண்டு காளைகளை வளர்த்து அவற்றுடன் உறவாடித் திரியும் முக்கிய கதாபாத்திரத்தை அவரிடம் ஒப்படைத்தோம். கொரோனா காலத்தில் நான்கு மாதங்கள் அந்தக் காளைகளோடு பழகி, தாம் ஏதும் சொன்னால் அதைக் கேட்கும் அளவுக்கு காளைகளை மாற்றிவிட்டார்.
"அந்த இரண்டு காளைகளுடன் கதைநாயகனுக்கு இருக்கின்ற உறவும் அவை காணாமல் போகும்போது ஏற்படும் இடர்பாடுகளும் அதன் விளைவாக ஊடகங்களின் பார்வை குவிவதும் படத்தில் விரிவாக இடம்பெறும். இறுதிக்காட்சிகள் பெரும் எழுச்சியாக இருக்கும்," என்கிறார் அரிசில் மூர்த்தி.
சிவகங்கை அருகே உள்ள, அதிக வசதிகள் இல்லாத கிராமத்தில்தான் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். இப்படி ஒரு கிராமத்தை தேர்வு செய்ய சிரமப்பட்டாராம்.
"இன்று ஊரும் உலகமும் நிறைய மாறிவிட்டன. வசதி இல்லாத கிராமத்தை தேடிப் பிடிக்க தனிப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில் சிவகங்கை அருகே ஒரு கிராமம் கச்சிதமாகப் பொருந்தியது.
"மனித வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதிதான் சினிமா. அதன் மூலம் பல நல்ல விஷயங்களைச் சொல்ல முடியும். அதைத்தான் செய்ய விரும்புகிறேன்," என்கிறார் அரிசில் மூர்த்தி.

