சூர்யா: நீயே என் ஆசீர்வாதம்
திருமண வாழ்க்கையில் 15வது ஆண்டை எட்டிப்பிடித்துள்ள நட்சத்திர தம்பதியர் சூர்யா, ஜோதிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன. இந்நிலையில், ஜோதிகா தனக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.
"15 ஆண்டுகால மகிழ்ச்சி இது. அனைவரது அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி," என்று தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜோதிகா.
மனைவியின் அந்தப் பதிவை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா, "நீயே என்னுடைய ஆசீர்வாதம் ஜோ. அனைவரின் அன்பிற்கும் மரியாதைக்கும் நன்றி," என்று பதிலுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை ஆண்டுகால திருமணப் பந்தத்தில் ஒருமுறை கூட சூர்யா தம்மை கடிந்துகொண்டதே இல்லை என்றும் மிகுந்த அன்பு காட்டுவார் என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் ஜோதிகா தெரிவித்திருந்தார்.
அதிக கால்ஷீட்: தயங்கும் கீர்த்தி
தமது வழக்கமான பாணியில் இருந்து விலகி, ஒரு காதல் கதையை இயக்க உள்ளார் பாலா.
நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான '2டி'யின் தயாரிப்பில் உருவாகும் படம் இது. அதர்வா நாயகனாக நடிப்பது உறுதியாகிவிட்டது.
இப்போது நாயகியாக யாரை நடிக்க வைப்பது எனும் விவாதம் நடைபெற்று வருகிறதாம். அநேகமாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று தகவல். அவருடன் தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், வித்தியாசமான கதைக்களம், பாலாவின் இயக்கம் உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக கீர்த்தி இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதுபோன்ற படங்கள் தமக்கு மேலும் சில விருதுகளையும் சிறந்த நடிகை என்ற பாராட்டையும் பெற்றுத் தரும் என அவர் நம்புகிறாராம். எனினும், தயாரிப்புத் தரப்பில் அதிக நாள்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என்று கேட்பது மட்டுமே கீர்த்திக்கு ஒத்துவரவில்லை எனக் கூறப்படுகிறது.
வித்யுலேகா திடீர் திருமணம்
குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாராட்டு பெற்ற வித்யுலேகா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண நிகழ்வில் மணமக்களுக்கு நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டனர்.
பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ள வித்யுலேகா, 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு, கொரோனா ஊரடங்கின்போது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் திருமணம் நிச்சயமானது.
மிக விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென எளிமையான முறையில் வித்யுலேகாவின் திருமணம் நடந்தேறி உள்ளது.
திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள், பிரபலங்களின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார் வித்யுலேகா.

