படிக்கும் மாணவர்கள் மீது சாதிச் சாயம் பூசுவதால் அவர்களின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி உருவாகிஉள்ளது 'சாயம்' படம்.
ஒயிட் லேம்ப் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் விஷ்வா, சைனி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாக உதயன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.
நிகழ்வில் பேசிய எஸ்ஏசி, "என் மகன் விஜய்யைப் பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்குப் போராட்டம் நடத்துவேன் எனக் கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிலிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. நாம் நினைத்தால், இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.
"என் படத்தில் நடித்த அபிசரவணன் தற்போது விஜய் விஷ்வா எனப் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். விஜய் என்று சொன்னாலே ஓர் அதிர்வு ஏற்படும்," என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

