தனக்கு யாரும் வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது என்பதில் சிலர் கவனமாக இருந்ததாகச் சொல்கிறார் சாந்தனு.
ஆனால் அதையும் மீறி தமக்கு சில வாய்ப்புகள் கிடைத்து வருவதாக 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகி உள்ளது இப்படம். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அதுல்யா ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
"என்னை வைத்துப் படம் தயாரிக்க வேண்டாம் என்று நிறைய பேர் தடுத்துள்ளனர். அதையும் மீறி தயாரிப்பாளர் ரவீந்தர் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரிக்கத் தொடங்கி, இப்போது முடித்தும்விட்டார்.
"இன்றைய சூழலில் திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் தங்கள் கவலைகளை மறந்து, சிரித்து மகிழ்வதுதான் முக்கியம். அதை மனதிற்கொண்டுதான் ஸ்ரீீஜர் இந்தப்படத்தை இயக்கி உள்ளார்.
"இது பெரியவர்களுக்கான படம் என்று சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையல்ல. இது குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய படம்தான். முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டது.
"ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்றால் அதை அவர் மட்டுமே தனித்துச் செய்ய முடியாது. குறைந்தது அவரைச் சுற்றியுள்ள பத்துப் பேராவது இவ்வாறு நினைக்க வேண்டும். எனக்காக நீங்கள் அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் சாந்தனு.
'முருங்கைக்காய் சிப்ஸ்', மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் என்று தம்மால் உத்தரவாதம் வழங்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், படக்குழுவின் உழைப்பைப் பார்த்த பிறகு படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற எண்ணம் மனதில் வேரூன்றிவிட்டது என்றார்.
முன்னதாகப் பேசிய படத்தின் நாயகி அதுல்யா ரவி, சாந்தனு மிக இனிமையான மனிதர் என்று குறிப்பிட்டார். சாந்தனு எப்போதுமே சக நடிகர்களை ஊக்குவிப்பார் என்றும் படப்பிடிப்பில் நடிப்பு தொடர்பாக தமக்குப் பல்வேறு குறிப்புகளைக் கொடுத்து அவர் உதவியதாகவும் அதுல்யா கூறினார்.
"சாந்தனு மிகவும் இனிமையான நடிகர். படப்பிடிப்பில் இருக்கும்போது யாருக்காவது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தம்மால் முடிந்ததை உடனடியாகச் செய்வார். எனக்கும் அவர் அவ்வாறு உதவி செய்ததுண்டு.
"படப்பிடிப்பின்போது படமாக்கப்படும் காட்சிகளில் மட்டுமே அவரது முழுக்கவனமும் இருக்கும். அதேபோல் படப்பிடிப்பு முடிந்ததும் இருவருமே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து விளையாடுவோம்.
"இந்தப் படம் நிச்சயமாக சாந்தனுவின் திரைப் பயணத்தில் நல்ல திருப்புமுனையாக அமையும்," என்றார் அதுல்யா ரவி. முழு நீள நகைச்சுவைப் படைப்பாக உருவாகியுள்ள 'முருங்கைக்காய் சிப்ஸ்' விரைவில் வெளியீடு காண உள்ளது.
சாந்தனுவின் தந்தையும் இயக்குநருமான பாக்யராஜ் பேசுகையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஏராளமான தடைகளைக் கடந்து படத்தை தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 'முந்தானை முடிச்சு' படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் சம்பந்தப்பட்ட காட்சியை இன்றளவும் ரசிகர்கள் வெகுவாக ரசிப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.
"நடிகர் 'மிர்ச்சி' சிவா தான் நடனத்தில் எனக்கு குரு. அவர் நன்றாக நகைச்சுவை செய்கிறார். சாந்தனுவின் உழைப்பை அனைவரும் பாராட்டுவது மனநிறைவு தருகிறது.
"எனினும் என் மகன் நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பதுதான் எனக்குப் பெரும் மகிழ்ச்சி தருகிறது.
"இப்படத்தின் நாயகி கோயம்புத்தூர் பெண் என்பது முதலில் எனக்குத் தெரியாது. அவர் ஆங்கிலத்தில் பேசப் போகிறார் என நினைத்து அவருடன் பேசுவதைத் தவிர்த்தேன்.
"பின்னர்தான் விவரம் தெரிந்தது. தமிழ் பேசும் பெண் இந்தளவு முன்னேறி இருப்பதில் மகிழ்ச்சி. அவர் மேலும் முன்னேற வேண்டும்," என்றார் பாக்யராஜ்.
'மாஸ்டர்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சாந்தனு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதையடுத்து படம் வெற்றி பெற அவரது திரையுலக நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சாந்தனு, வெற்றிக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
, : சாதனம்

