தமிழ் சினிமாவின் தலைநகரான கோடம்பாக்கம் மீண்டும் களைகட்டி உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
முன்னணி நாயகன், நாயகிகள் நடித்துக்கொண்டிருக்கும், அடுத்து நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளிவருகின்றன. அப்படிப்பட்ட சில தகவல்கள்.
கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகும் 'சூர்ப்பனகை' படத்தில் நடித்து வருகிறார் ரெஜினா. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் படம் இது. படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உதவியுள்ளார்.
லட்சக்கணக்கான ரசிகர்கள் இத்தொகுப்பு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி உள்ளது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார் ரெஜினா. கதைப்படி அகழ்வாராய்ச்சியாளரான அவர், அரிய பொருளை ஆய்வின்போது கண்டெடுக்கிறார். அதன் பிறகு சில சுவாரசியமான திருப்பங்கள் ஏற்படுகின்றன.
ஒரு கட்டத்தில் சிலரால் அவர் பாதிக்கப்படுகிறார். அதன் பிறகு அவர் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதுதான் கதையாம்.
இயக்குநர் அமீர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'வாடி வாசல்' படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்.
கதைப்படி சூர்யாவுக்கு இதில் மாடுபிடி வீரர் கதாபாத்திரமாம். இதற்காக அண்மைய சில வாரங்களாக அவர் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில் அமீரும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தின் இறுதிக்கட்ட பணி தொடங்கி உள்ளது. டிம்பிள் ஹயதி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் அதிகம் இடம்பெறும் எனத் தகவல். நடுத்தர வர்க்க இளைஞன் தவறு செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கிறான். அதனால் ஏற்படும் விளைவுகளையும் எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.

