கரீனாவுக்குப் பதில் கங்கனா
ஐந்து மொழிகளில் தயாராகி வரும் 'சீதா' படத்தின் கதாநாயகியாக கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.
ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் கதைப் பகுதி சீதையின் பார்வையில் சொல்லப்படுகிறது. மேலும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் இது.
இந்தப் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரைத்தான் படக்குழு அணுகியது. அவரோ 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர் தரப்புக்கு கடும் அதிர்ச்சி.
இதையடுத்து, கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
தமிழில் நடித்த 'தலைவி' படத்தின் வசூல் நன்றாக இருப்பதாகக் கிடைத்த தகவலால் உற்சாகத்தில் உள்ள கங்கனா, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் 'சீதா' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
வாய்ப்புகளைத் தவிர்க்கும் காஜல்
தாய்மை அடைந்திருப்பதால் நடிகை காஜல் அகர்வால் புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரை வைத்து படம் எடுப்பவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
தற்போது 'பாரிஸ் பாரிஸ்', 'ஹேய் சினாமிகா', 'கருங்காப்பியம்', 'கோஷ்டி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் காஜல்.
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'ஆச்சார்யா', 'கோஸ்ட்' ஆகிய படங்களில் நடிக்கிறார்.
தமிழிலும் அவரை நம்பி இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்நிலையில், காஜல் தாய்மை அடைந்திருப்பதாகவும் அதனால் தற்காலிக ஓய்வில் இருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது. இதை அவரது தரப்பு மறுக்கவோ அல்லது உறுதி செய்யவோ இல்லை.
இதையடுத்து அவருக்குப் பதிலாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சி தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அநேகமாக ரகுல் பிரீத் சிங் அல்லது ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

