தாம் நடிக்கும் ஒவ்வொரு படம் குறித்தும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த வகையில் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும், இன்னும் பெயரிடப்படாத படத்திலும் ஐஸ்வர்யாவுக்கு சவாலான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
அறிவுத்திறன் குன்றிய பெண்ணாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பது எளிதல்ல என்பதை உணர்ந்து, பல விவரங்களை உரியவர்களிடம் கேட்டு அறிந்துகொண்டு நடித்துள்ளார்.இதில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
"சில குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே சில குறைபாடுகள் இருக்கக்கூடும். என் படத்தின் கதாநாயகிக்கு உலக அறிவு குறைவு எனலாம். தன்னைச் சுற்றி நடப்பது குறித்து எதுவுமே தெரியாமல் வாழும் ஓர் அப்பாவி.
"விபத்தில் சிக்கும்போதும்கூட சில குழந்தைகளுக்கு இவ்வாறு பிரச்சினை ஏற்படும் வாய்ப்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த வகையில் எனது படத்தின் நாயகி எதனால் இவ்வாறு ஆகிறார் என்பது படம் பார்க்கும்போது புரியும்.
"சில திடீர் திருப்பங்கள் காரணமாக நாயகியின் பின்னணி குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஒரு தரப்புக்கு ஏற்படுகிறது. இதையடுத்து புலனாய்வு அதிகாரியாக அர்ஜுன் நியமிக்கப்படுகிறார். அவர் திரையில் தோன்றிய பின்னர் ரசிகர்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த சுவாரசியத்துடன் கடந்து போகும்.
"இதுபோன்ற கதாபாத்திரங்களைக் கையாள்வதில் அர்ஜுன் எந்தளவு திறமைசாலி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் இப்படத்தின் பலமாக உள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. அதனால் அவருக்கும் இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் தினேஷ் லட்சுமணன்.
இவர் தன்னைத் தேடி வந்து கதையை விவரித்தபோது, சில நிமிடங்களிலேயே அதன்பால் ஈர்க்ப்பட்டதாகச் சொல்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான அருள்குமார்.
"நீண்டகாலமாக தமிழில் இதுபோன்ற கதைக்களத்துடன் எந்தப் படமும் வெளியானதாக எனக்குத் தெரியவில்லை. தினேஷ் சொன்ன கதை மிக விறுவிறுப்பான ஒன்றாக இருந்தது.
"குற்றம், திகில், எதிர்பாராத முடிச்சுகள், புலன் விசாரணை, உண்மை என்ற வரிசையில் நகரும் காட்சிகளுடன் படம் பார்ப்பது நிச்சயமாக ரசிகர்களுக்குப் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்.
"கொரோனா நெருக்கடியில் இருந்து மக்கள் விடுபட்டு வரும் சூழலில் இந்தப் படமும் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும். இந்தப் படம் ஐஸ்வர்யாவுக்கு விருதுகளைப் பெற்றுத் தரும்," என்கிறார் தயாரிப்பாளர் அருள் குமார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்

