இயக்குநர் சங்கரின் மகள் என்பதற்கான எந்தவொரு சுவடும் வெளியே தெரியாத வகையில், மிகப் பணிவாக, இயல்பாகப் பேசும் பெண்ணாக இருக்கிறார் அதிதி என்று பாராட்டுகிறது 'விருமன்' படக்குழு.
கார்த்திக்கு ஜோடியாக இந்தப் படத்தின் மூலம்தான் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகிறார் அதிதி.
படத்தின் பூசை முடிந்து படப்பிடிப்புக்கு கிளம்பும் வரை அவ்வப்போது தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்து சென்ற அதிதி, அங்குள்ள உதவியாளர் முதல் தயாரிப்பாளர் வரை அனைவருடனும் மிக இயல்பாகப் பேசிப் பழகியுள்ளார். கேலி, கிண்டல், பணிவு, மரியாதை என்று ஒருசில நாள்களிலேயே அனைவரது மனதிலும் இடம்பிடித்துவிட்டாராம். இப்போது 'விருமன்' படக்குழுவில் பலருக்கு அவர்தான் 'பாசமான தோழி'.
இந்தப் படத்திலும் குடும்ப உணர்வுகளை மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்போகிறாராம் இயக்குநர் 'கொம்பன்' புகழ் முத்தையா.
முதல் நாள் படப்பிடிப்பின்போதே மொத்த படக்குழுவும் அதிதி நடிப்பைக் கண்டு அசந்துபோயிருக்கிறது.
அன்றுதான் முதன்முதலாக கேமரா முன் நிற்கிறார் அதிதி. அதனால் சற்றே பதற்றமாக இருப்பார் என்று படக்குழுவினர் நினைத்திருக்க, அவரோ எடுத்த எடுப்பிலேயே தனக்கான வசனங்களை மளமளவென பேசத் தொடங்கிவிட்டாராம். அது குறித்து இன்னமும்கூட ஆச்சரியத்துடன் விவரிக்கிறார் 'விருமன்' தயாரிப்பாளரான ராஜசேகர்.
"கார்த்தி அனுபவ நடிகராகிவிட்டார். அவர் முன்னால் நின்று, அவரை உற்றுப் பார்த்தபடி நீளமான வசனத்தைப் பேச வேண்டும். கொஞ்சமாவது தயங்குவார் என்று பார்த்தால், கார்த்தியே ஓரடி பின்வாங்கும் வகையில் அழுத்தம் திருத்தமாக அந்த வனத்தைப் பேசி முடித்தார்.
"இயக்குநர் முத்தையா உடனே என் பக்கம் திரும்பி, 'சார் நமக்கு தேனு கிடைச்சிடுச்சு' என்றார். 'விருமன்' கதையில் தேன்மொழி எனப்படும் 'தேனு' தான் கதாநாயகி. எனவே இந்தக் கதாபாத்திரத்தை மிகுந்த ரசனையுடன் வடிவமைத்துள்ளார் முத்தையா," என்று அதிதி புராணம் பாடுகிறார் ராஜசேகர்.
மருத்துவம் படித்து முடித்துள்ள அதிதிக்கு சிறு வயது முதலே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் கனவாம். நுனி நாக்கு ஆங்கிலத்தில்தான் பேசுவார் என படக்குழுவில் பெரும்பாலானவர்கள் நினைத்திருக்க, அழகுத் தமிழில் பேசி அசர வைத்துள்ளார்.
இப்போது கதைக்கு ஏற்றபடி மதுரை தமிழில் பேசுவதற்கு நடிகை கலைராணி பயிற்சி அளித்து வருகிறாராம். அதேபோல் அதிதியின் நடிப்பை மெருகேற்றும் பொறுப்பு ஆனந்த் ஸ்வாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
'விருமன்' படத்தில் குடும்ப உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் பாசப் பிணைப்பை விவரிக்கும் வசனங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
அந்த வசனங்களைத் தேர்ந்த அனுபவ நடிகையைப் போல் மிக ரசனையாகப் பேசுகிறார் அதிதி எனப் படக்குழு பாராட்டுகிறது.
"ரத்தமும் சதையுமான குணத்தை, உணர்வை, பாசத்தை தமது முகபாவங்களால் இரண்டே நொடியில் வெளிப்படுத்தி விடுகிறார் அதிதி. அடுத்த காட்சி என்ன... வசனம் எங்கே என்று கேட்கும் அவரது ஆவலும் வேகமும் ஆச்சரியம் அளிக்கிறது," என்கிறார் தயாரிப்பாளர் ராஜசேகர்.
அதிதி சங்கர்
, :

