தமிழால் கிடைத்த வாய்ப்பு
தமிழ் பேசத் தெரிந்த நடிகை என்பதால்தான் தமக்கு 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.
இந்தப் படத்தில் ஒப்பனையின்றி நடித்துள்ள போதிலும், திரையில் தம்மை அழகாகக் காட்டியுள்ளதாக உற்சாகத்துடன் சொல்கிறார்.
"மிதுன் என்ற புது முகத்துடன் இணைந்து நடித்துள்ளேன். குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் அமையவேண்டும் என்பதே எனது விருப்பம்.
"அந்த வகையில் இந்தப் படம் பெரிதாகப் பேசப்படும் என்பது உறுதி. எனது கதாபாத்திரத்துக்காக சில நாள்கள் மாடுகளுடன் பழகவேண்டியிருந்தது. கொஞ்சம் சிரமப்பட்டேன் என்றாலும் அது நல்ல அனுபவம்," என்கிறார் ரம்யா பாண்டியன்.
பாராட்டுகள் பெற்ற தமன்னா
முன்னணி நாயகிகள் பலர் புதுப்படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்ப தில்லை. இல்லையெனில் பங்கேற்புக்காக தனியாக தொகை கேட்கின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், தாம் நடித்து ஏற்கெனவே வெளியான படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளார் தமன்னா.
அவர் நடித்த 'சீட்டி மார்' என்ற தெலுங்குப் படம் அண்மையில் வெளியீடு கண்டது. அடுத்து 'மேஸ்ட்ரோ' என்ற படம் வெளியீடு காண்கிறது. இரண்டு படங்களின் விளம்பர நிகழ்வும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்தது.
ஏற்கெனவே வெளியான படம் என்பதால் 'சீட்டி மார்' நிகழ்வை தமன்னா தவிர்ப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் அவரோ, நேர நெருக்கடியை எப்படியோ சமாளித்து இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவரது இந்த அக்கறையும் தொழில் பக்தியும் பாராட்டுக்குரியவை என சமூக வலைத்தளங் களில் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பதிலடி கொடுத்த பவானி சங்கர்
சமூக வலைத்தளம் வழி நடைபெற்ற கலந்துரையாடலின் போது தம்மைக் கிண்டல் செய்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு நாகரிகமாகப் பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
அண்மையில், "திங்கள் கிழமையாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை போல் இருங்கள்" என்று பதிவிட்டிருந்தார் பிரியா.
அதற்கு ரசிகர் ஒருவர், "உங்களுக்கு அறவே போர் அடிக்காதா," என்று கிண்டலுடன் கேட்டிருந்தார். அதற்கு, "நீங்கள் சொல்ல விரும்பியது புரிகிறது. நிச்சயமாக எனக்குப் போரடிக்காது. ஏனெனில், செய்யும் வேலைக்கு கைநிறைய சம்பளம் கிடைத்தால் எதுவுமே போரடிக்காது," என்று பதிலடி கொடுத்துள்ளார் பிரியா.

