'பேய காணோம்' என்ற வித்தியாசமான தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகிறது. இதில் மீரா மிதுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செல்வ அன்பரசன் இயக்கும் இந்தப் படத்தின் பணிகள் மீரா மிதுனால் தடைபட்டு நிற்கின்றன.
வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மீரா. அவருக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை.
"தலைப்பை போல் படமும் வித்தியாசமாக இருக்கும். வாழ்க்கையில் நம்மில் பலர் பணத்தைக் காணோம், குழந்தையைக் காணோம், விலை மதிப்புள்ள பொருள்களைக் காணோம் என்று பலவற்றைத் தேடி இருப்போம். ஆனால் சிலர் பேயைக் காணோம் என புலம்பியபடி தேடுகிறார்கள்.
"எதற்காக இந்தத் தேடல், இறுதியில் என்ன ஆகிறது, பேய் என்ன செய்கிறது என்பதை நகைச்சுவை கலந்து சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறோம். 90 விழுக்காடு படப்பிடிப்பு முடிந்துவிட்டது," என்கிறார் இயக்குநர்.
மீரா பிணையில் வெளிவந்ததும் ஒரு வாரத்துக்குள் படப்பிடிப்பு முழுமை அடையும் என்றும் நடப்பாண்டு இறுதிக்குள் படம் வெளியீடு காணும் என்றும் தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது. , :

